நாட்டில் மீண்டும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழாமலிருக்க அரசு உறுதி- சமரவீர

mangala_samaraweeraஇலங்கை அரசு நல்லிணக்கத்தை எட்டுவதில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கடந்த ஆண்டு தீர்மானத்தை அமல்படுத்துவதில் இலங்கை அரசின் செயல்பாடு குறித்து, நேற்று செவ்வாய்க்கிழமை, ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சில் ஆணையரின் வாய்மொழி அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து, இன்று ஜெனிவாவில் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர,இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்தை அமல்படுத்த உறுதியளித்தார் என்பதை சுட்டிக்காட்டினார் .
சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இத்தீர்மானத்தை அமல்படுத்துவதன் மூலம் வலுப்பெறும் என்று ஜனாதிபதி இந்த ஆண்டு இலங்கை சுதந்திர தின உரையில் கூறியதை சமரவீர நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் புதிய தேசிய ஒற்றுமை அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய சமரவீர, நல்லாட்சி வழங்குவது, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் பாதுகாத்தல் மற்றும் , நல்லிணக்க வழிமுறையைத் தொடங்கியிருப்பது போன்றவைகளை குறிப்பிட்டார்.
இந்த நல்லிணக்க வழிமுறைகள ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பதற்கான செயலகம் பிரதமர் அலுவலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
வட இலங்கையில் முக்கிய பிரச்சனைகளான, ராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட பொதுமக்கள் காணிகள் 2018ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார். நாட்டின் திட்டங்களுக்காகத் தேவைப்படும் காணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என்றார் அவர்.
காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடை சட்டத்தை விலக்கிகொண்டு, மனித உரிமைகளை மதிக்கும் அதே சமயத்தில், பயங்கரவதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் புதிய சட்டம், ஐநா வல்லுநர்களின் ஆலோசனைகளுடன் அமல்படுத்தப்படும் என்றார் அவர்
நல்லிணக்கம் என்பது ஓரிரவில் வருவதல்ல என்று கூறிய மங்கள சமரவீர, அது கடுமையான உழைப்பாலும், தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும் தான் பெறமுடியும் என்றார்.
மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட சமரவீர , இலங்கையின் சாதனைகளை இந்த அறிக்கை ஏற்றுக் கொண்டிருப்பதையும், அதே சமயத்தில் அவர் கவலை வெளியிட்டிருக்கும் அம்சங்களையும் இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என்றார். இலங்கையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தை எட்ட சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட இலங்கை தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com