சற்று முன்
Home / செய்திகள் / நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்துவதை சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்துவதை சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் – ஜனாதிபதி

maithripala-sirisenaதேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஆர்.சம்பந்தன் தலைமையிலான கட்சியின் நேர்மையான ஆதரவு அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை சீர்குலைக்க முயல்வது நாளை பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு மேற்கொள்ளும் அநீதியாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக இப்போது விமர்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ 13வது திருத்தம் அல்ல 13 ஆவதற்கும் மேலாக (அதிகாரப்பகீர்வில்) போவதாக் உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி. நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்துவதை எதிர்பார்ப்பவர்களே தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

24 வருடங்கள் வடக்கில் அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலை மிகவும் கொடியது. தெற்கு மக்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள். வடக்கு மக்கள் கேட்பது அவர்களது காணிகளையே. அது அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும். நியாயமற்ற பிரசாரங்களை விடுத்து நியாயமாக பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுங்கள் என்றும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து உரையாற்றுகையில் :-

நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுகளை வழங்க முயன்ற சகல சந்தர்ப்பங்களிலும் அதற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. தேசிய நல்லிணக்கம் இல்லாத நாடொன்றில் அதற்கான வேலைத்திட்டமும் இல்லாமை பேரனர்த்தமாகும். 70ஆம், 80ஆம் தசாப்தங்களின் மீது கவனம் செலுத்தும்போது இனங்களுக்கு இடையிலான மோதல்களைக் காணமுடியும். இதன் அனுபவமும் நாட்டு மக்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எத்தனை அமைச்சுப் பதவிகளை வழங்கின என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து பயங்கரவாதத்தை பௌதீக ரீதியாக அழித்தார்கள். பிரிவினைவாத சிந்தனையை தோற்கடிக்க இதுவரை முடியவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிகாட்டினார்.

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண மேற்கொள்ளப்படும் முயற்சியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாகும். கடந்த காலத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல் பிரச்சினைகளை பயன்படுத்தியதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை சீர்குலைக்க முயன்று வருவோர் எதிர்காலத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளையும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

புதிய அரசியல் அமைப்பை அறிமுகம் செய்து தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண அரசாங்கம் மேற்கொள்ளும் நேர்மையான முயற்சிக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்றவற்றுக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்டன. பௌத்த பிக்குகளே கிளர்ந்தெழுந்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தமை வரலாற்றில் குறிப்பிடக்கூடிய விடயம். இத்தகைய எதிர்ப்புகளினால் பிரச்சினை முற்றி மோதல்களுக்கு வழிவகுத்ததுடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.

இளப்பிரச்சினைக்கு தீருவாக ஜே. ஆர். ஜெயவர்தன – ராஜிவ்காந்தியுடன் மேற்கொண்ட இந்திய, இலங்கை சமாதான உடன்படிக்கையும் எதிர்ப்பு காரணமாக முழுமையாக இடம்பெறவில்லை
இதே போன்றே இப்போதும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் மிக மோசமான விமர்சளங்கள் இடமபெறுகின்றன. இத்தகைய போக்குகள் மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கே வழிவகுக்கும்.

மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்தன. இது தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பிரச்சினையாக மாறியது. இதனால், பெரும்பாலானோர் இடம்பெயர இது காரணமாகியது. இன்றும் எமது மக்கள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். இது எமது நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கும் விடயம் என்பதை நாம் உணர வேண்டும்.
பிரேமதாச போன்ற சிறந்த தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் யுத்தத்தினால் நாம் இழந்தோம்.

யுத்த வெடிச் சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டைப் பிளவுபடுத்தும் சிந்தனையைத் தோற்கடிக்க இதுவரை முடியாமற் போயுள்ளது. சர்வதேச ரீதியில் நிலவும் இந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் உறுதிப்படுத்தப்படும்.

புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த யுகங்களைப் போன்றே அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கெதிரான கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன. நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய பிரச்சினையை பயன்படுத்துவோர் ஒருபோதும் தமது நோக்கத்தை அடைய முடியாது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க சதிசெய்வது நாட்டின் எதிர்காலத்தை பாதாளத்திற்குத் தள்ளும் செயலாகும். அரசாங்கம் மிக நேர்மையாக செயற்பட்டு வருகிறது. சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை இலக்காகக் கொண்டு செயற்படும் போது அதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண சிறந்த தருணம் இது. எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் இதற்கு ஒத்துழைக்கும் சிறந்த தலைவர். இவ்வாறான சந்தர்ப்பம் முனனொரு போதும் அமைந்ததில்லை.
பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். காலம் தாமதிப்பது எமக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேடைகளில் வீர வசனம் பேசி விமர்சனங்களில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்றும் அரசாங்கம் எந்தப் பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருக்கிறது.எனவே தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி:

அரசாங்கம் ஒருபோதும் அடக்கு முறையை பயன்படுத்தி தொழிற்சங்க செயற்பாடுகளை அடக்க முயலாது தொழிற்சங்க நடவடிக்கைகளினால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தினால் அப்பாவி நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.வசதி உள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார்கள்.பஸ் இல்லையென்று அவர்களுக்கு பிரச்சினை இருக்காது.சொகுசு வாகனங்களில் பயணம் செய்வார்கள்.

தங்களது பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்துவதற்கு முன்வருமாறு தொழிற்சங்க தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். முதலில் அமைச்சருடன் பேச்சு நடத்துங்கள். பிரச்சினைகள் குறித்து பேச துறை சார்ந்த அமைச்சர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து தீர்வை எட்ட முடியும். இவற்றினாலும் முடியாமற்போனால்; நான் தலையீடு செய்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com