நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி – அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

maithreeஇன்று பல்வேறு தரப்பினர் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பில் நாட்டின் அனைத்து பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியலமைப்பு உட்பட மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற செயற்படுகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கவே இந்த குழுக்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவையொட்டிய நினைவஞ்சலி நிகழ்வு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்
‘முஸ்லிம் – சிங்கள மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து சாதாரண பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இந்த நாட்டை ஒரு சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்காக சங்கைக்குரிய சோபித தேரர் அவர்கள் துணிவோடு செயற்பட்டார். சமய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் பொது அபேட்சகர் தேர்தல் பிரசாரங்களுக்கும் முன்பிருந்தே அவரிடம் நீண்ட காலமாக இருந்துவந்தவையாகும் .
19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் அதனூடாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.
இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். அதற்கெதிரான தடைகளை வெற்றி கொள்ள வேண்டியது அவசியமாகும். இத்தகைய செயற்பாடுகளுக்கு மத்தியில் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சில குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதி முயற்சிகளில் இறங்கியுள்ளதை அங்கவீனர் படையினரின் ஆர்ப்பாட்டத்தில் காண முடிகிறது.
அங்கவீனரான படையினருக்கே தெரியாமல் அவர்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன. படையினரின் கோரிக்கை 6 வருடம் பழமையானது எனினும் 4 மாதத்துக்கு முன்னரே எனது கைகளில் இந்த விடயம் கிடைத்தது. அதில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருந்த போதும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்று தெரிவித்தார்..
சோபித தேரரின் சமூகப் பணியை முன்கொண்டு சென்று ஒரு சிறந்த தேசியப் பணியை ஆரம்பிப்பதற்காக ஒரு மத்திய நிலையத்தை அமைப்பதற்கு டாக்டர் ராஜா விஜேதுங்க வினால் காணி இதன்போது அன்பளிப்புச் செய்யப்பட்டது.
சோபித தேரரின் தேசியப் பணி தொடர்பான ஒரு குறுந் திரைப்படம் இந்த நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்பட்டதுடன், சோபித தேரர் நினைவு நூல் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டது.
இதேவேளை அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் :
யுத்தத்தினால் அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கி, படையினருக்கும், அரசாங்கத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு முன்னால் திரண்ட அங்கவீன படையின ரை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை அப்பாவிகளான இவர்கள் அறிந்திருக்கவில்லை . பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து தேவைப்பாடுகளும் முழுமை பெற்றிருந்த நிலையில் இவ்வாறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதே அரசுக்கு எதிரான சக்திகளின் நோக்கமாகும்.
அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டிருந்தபோதும் நீண்டகாலமாக அரசாங்கத்தை எதிர்த்துவரும் அரசியல் அமைப்புகளில் செயற்படும் சில பிக்குகள், சில வெளியாட்களின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய நிகழ்வுகள் அரசியல் நோக்கமுடையவை என்பது தெளிவானது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதிநிதிகளுக்கும் படைவீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையே பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என’று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com