நாங்கள் வெற்றி பெற்ற தரப்பினர் – அந்த வெற்றியை மீண்டும் தாரைவார்க்க நாம் விரும்பவில்லை – யாழ் கட்டளை தளபதி

நாங்கள் வெற்றி பெற்ற தரப்பினர். மிக நீண்டகால போராட்டத்தில் பல இழப்புகளின் பின்னர் நாம் யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை பாதுகாத்துள்ளோம். அந்த வெற்றியை மீண்டும் தாரைவார்த்து நாட்டை பிரச்சினைக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து எமது இராணுவம் மிகவும் பலமான நிலையிலும் அதேபோல் நாட்டில் மக்கள் மத்தியில் மிகவும் கண்ணியமாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. எமது கடமை நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை காப்பாற்றுவதேயாகும். எனவே வடக்கில் படைக்குறைப்பு உள்ளிட்ட விடையளை நாங்கள் படிப்படியாகவே செயற்படுத்த முடியும். இவை உடனடிச் சாத்தியமற்றவை என யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

பலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் 27.03.2016  தென்னிலங்கை மற்றும் வடக்கு  ஊடகவியலாளர்கள், ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி ஊடகத்துறை அமைச்சர் பரணவிதாரன பாதுகாப்பு தரப்பினர், இலங்கை பொலிஸ் பேச்சாளர்  உள்ளிட்டோருக்கிடையில் கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின்போது தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் ”வடக்கில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதா? அதுதொடர்பிலான தகவல்களைக் கூறமுடியுமா எனக் கேட்டபோதே யாழ் கட்டளை தளபதி  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

இந்த கலந்துரையாடலின் போது ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் நிலைமைகள் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் வடக்கு ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பு தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-

வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்போ அல்லது அவர்களை பின்தொடரும் எந்த சம்பவங்களோ இடம்பெறுவதில்லை. அதேபோல் தொடர்ச்சியாக இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவது வெறும் வதந்தி மட்டுமேயாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து எமது இராணுவம் மிகவும் பலமான நிலையிலும் அதேபோல் நாட்டில் மக்கள் மத்தியில் மிகவும் கண்ணியமாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் ஊடகத்தினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இருந்த நெருக்கம் மிகவும் குறைவாக இருந்தமை இவ்வாறான கருத்துகளை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக வடக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினருடன் கொண்டிருந்த தொடர்பு குறைவாகவே இருந்தது.

எவ்வாறு இருப்பினும் வடக்கில் ஊடகவியலாளர்களையோ அல்லது ஊடகங்களையோ கட்டுப்படுத்த வேண்டிய தேவை எப்போதும் இராணுவத்தினருக்கு இருக்கவில்லை. ஒரு சிலரின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தவறான கருத்துகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும் யுத்தம் நடந்த காலத்திலும், இறுதி யுத்தம் நடந்த காலத்திலும் களத்தில் இருந்து போராடிய இராணுவ வீரர்கள் இன்றும் இராணுவத்தில் உள்ளனர். அவர்களின் மனநிலைமை இன்னும் சற்று மாறுபட்ட ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு இருக்கையில் அவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை விரைவில் சரிசெய்ய முடியும் .

மேலும் யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து நாட்டில் பிரதான இரண்டு தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்த இரண்டு தேர்தலின் போதும் நிலைமைகள் ஒரேமாதிரியாக இருக்கவில்லை. குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலின் போது யுத்தம் நிறைவை எட்டியிருந்த காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் சற்று கடினமாகக் காணப்பட்டது. எனினும் கடந்த தேர்தலின் போது நிலைமைகள் அவ்வாறு இருக்கவில்லை. கடந்த காலத்தில் நிலைமைகள் நன்றாகவே மாற்றம் கண்டுள்ளது.

எனினும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் எந்த அணியினர் ஆட்சியை கைப்பற்றினாலும் நாம் எந்த அரசாங்கத்தையும் சார்ந்து கட்சிகளைப்போல செயற்பட முடியாது. எமது கடமை நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை காப்பாற்றுவதேயாகும். அதை நாம் ஒவ்வொரு முறையும் சரியாக செய்து வருகின்றோம். மிக நீண்டகால போராட்டத்தில் பல இழப்புகளின் பின்னர் நாம் யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை பாதுகாத்துள்ளோம். அந்த வெற்றியை மீண்டும் தாரைவார்த்து நாட்டை பிரச்சினைக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை.

அதேபோல் யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பெருமளவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் தக்கவைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்த நிலங்களில் அரச நிலங்களும் பெரும்பாலான பொதுமக்களின் நிலங்களும் இந்த கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டன. அரச நிலங்களில் பாதுகாப்பு முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பது எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. ஆனால் பொதுமக்களின் காணிகளில் இராணுவ முகாம்களை அமைக்கவோ அல்லது இராணுவத்தை தங்கவைக்கவோ முடியாது. ஆகவே யுத்தத்தின் பின்னர் இராணுவம் வசம் இருந்த பொதுமக்களின் காணிகளை உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. இப்போது வரையிலும் பொதுமக்ளின் காணிகளை நாம் அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றோம். எஞ்சியுள்ள காணிகளையும் உரிய மக்களுக்கு ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.

அதேபோல் இராணுவ வெளியேற்றம் அல்லது தேசிய பாதுகாப்பு விடயத்தில் கேள்வியை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இன்று வடக்கில் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் எந்த சூழலும் இல்லை. பொதுமக்கள் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் வகையில் எமக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயற்படுகின்றனர். அதேபோல் இராணுவம் மட்டுமல்லாது கடற்படையினர், விமானப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com