நாங்களும் தனிய இறங்கி ஜெயித்துக் காட்டுவோம் – விஜயகாந்த அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இன்று சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ”எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். எனது கட்சியினர் அருமையாக இருக்கின்றனர். நான் தெளிவாக இருக்கிறேன்.

கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசவில்லை என்றால் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டியதுதானே என கூறுகின்றனர். கூட்டணி குறித்து சொல்ல வேண்டுமா, இந்த தேர்தலை தே.மு.தி.க. தனியாகத்தான் சந்திக்கப் போகிறது.

இந்த தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம். அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது ” என்றார்.
‘பேரம் என்றால் என்னவென்றே தெரியாது’
முன்னதாக, அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை தே.மு.தி.க. உறுதியாக உருவாக்கும். அனைவருக்கும் வேலை வழங்க தே.மு.தி.க. நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கான நல்லாட்சியை நாங்கள் உருவாக்குவோம்
தி.மு.க. என்றால் தில்லுமுல்லு கட்சி. அ.தி.மு.க. என்றால், அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வை தமிழகத்தைவிட்டு விரட்டும் நேரம் வந்து விட்டது. தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. தேர்தல் கூட்டணி தொடர்பான நல்ல முடிவை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்

விஜயகாந்த் கூட்டணிக்காக பேரம் பேசுவதாக அனைத்து பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறது. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. பேரம் என்ற வார்த்தைக்கே எங்களுக்கு அர்த்தமே தெரியாது.

விஜயகாந்த்தை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர் மற்றவர்களுக்கு கொடுப்பாரே தவிர, யாரிடமும் கைநீட்டி பணம் வாங்க மாட்டார். அவர் நடிகராக இருக்கும்போது, இயக்குநரிடம் மட்டும் தனது சம்பளத்தை கைநீட்டி வாங்கியிருப்பார். இப்போது யாரிடமும் வாங்க மாட்டார்.
அவரது தொண்டையில் டான்சில் பிரச்னை இருக்கிறது. அது பத்திரிகையாளர்களுக்கு தெரியுமா? எனவே, அவரது பேச்சு சற்று குளறுபடியாக இருக்கிறது. அதை வைத்து எப்படியெல்லாமே எழுதுகிறீர்கள். எம்.ஜி.ஆருக்கும் தொண்டையில் அடிபட்டு இருக்கும்போது, அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை என்றார்கள். அதேபோல், கர்மவீரர் காமராஜரை படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது யார்? கர்மவீரர் காமராஜரும், எம்.ஜி.ஆரும்தான். அதேபோல், கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் பெயரும் கண்டிப்பாக நிலைத்து நிற்கும்.
ஜெயலலிதா அமைச்சரவையில் முதுகெலும்பு இழந்து வாழ்ந்த அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து வெகு விரைவில் ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’ என்று புதுக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com