நல்லிணக்கத்துடன் செயலாற்ற உறுதி பூணுவோம்- மௌலவி சுபியான்

தியாகத்தை  நினைவூட்டும் புனித ஹஜ் பெருநாளை  கொண்டாடும் அனைத்து முஸ்லிம் மக்களும் துயரங்களின்றி நிம்மதியாக இந்நாட்டில் வாழ பிரார்த்திப்பதாக  யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தனது  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சியின் மூலம் இன மத குல பேதமின்றி மூவின மக்களும் நிம்மதியாக வாழ வழிபிறந்துள்ளது முஸ்லிம் மக்கள் இத் தினத்தில் நினைத்த நேரம் நினைத்த இடத்திற்கு சென்று வர கூடிய அளவுக்கு இந்நாடு இன்று சுதந்திரத் திருநாடாக மாறியுள்ளது இத்தியாக திருநாளில் சகல இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்து ஒற்றுமையுடன் பாகுபாடின்றி செயற்பாட இறைவனை மீண்டும் ஒரு முறை பிரார்த்திக்கின்றேன்.

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்றாஹிம் நபி(அலை) அவர்களைப் போல் எமக்கு தியாகம் செய்ய முடியா விட்டாலும் நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறை கட்டளைகளுக்கு அடிபணிந்து இறை தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து தன்னலமற்ற உணர்வோடும் சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே ஏற்கனவே கொண்டுள்ள நல்ல எண்ணங்களைப் புதிப்பித்து வாழ்ந்து மறுமையிலும் இன்மையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக.

அதேவேளை, “உள்நாட்டிலும் – வெளிநாட்டிலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். இத்திருநாளில் பாலஸ்தீன, மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்காகவும் நாங்கள் விசேட துஆக்களில் ஈடுபடவேண்டும். சகோதர முஸ்லிம்கள் மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் வேளையில் நாங்கள் இங்கு சந்தோஷமாக இருக்காமல் அம்மக்களது துன்பத்தில் பங்கு கொள்ளும் வகையில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.

விசேடமாக தமிழ், முஸ்லிம்மக்கள் தமது உரிமைகளை அரசியல் ரீதியாக பெற்றுக் கொள்வதற்கான அரசியல் சூழல் தற்போது நாட்டில் உருவாகியுள்ளது.

முஸ்லிம்கள் ஒற்றுமையாக – புரிந்துணர்வுடன் – தியாக சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதி பூணுவோம். எம்மிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலே எமக்கு எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம். அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள நாங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

இத்தினத்தில் சகல மக்களுக்கும் சாந்தி சமாதானம் ஒற்றுமை சகிப்புத்தன்மை புரிந்துணர்வு சகவாழ்வு மற்றும் தியாகத்துடன் வாழ இத் தினத்தில் பழகிக் கொள்ள வேண்டும் என  மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com