நல்லாட்சி அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர்

radhaநல்லாட்சி அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைவதற்காக 25 பாடசாலைக்குரிய வளங்களை பெற்று தருவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. மலையகத்தில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மலையகத்தின் சொத்தாக கருதப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் ஏனைய மாவட்டங்களுக்கு ஈடாக மலையகத்தில் கல்வி வளர்ச்சி உச்சம் பெரும் நிலையை உருவாக்க கூடிய ஆசிரியர்கள் இங்கு உருவாகி வருகின்றனர் என்பது சந்தோஷத்தை தர கூடிய விடயமாக அமைகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக பகுதிகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கும் முகமாக ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஊடாக “மலையக ஈ கல்வி வட்டம்” எனும் தொனிப்பொருளில் புதிய திட்டம் ஒன்று 27.11.2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது,

மலேசியாவில் முன்பள்ளி கல்விக்கு கூடுதலான ஆர்வமும் அந்நாட்டு கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோன்று மாணவர் ஒருவர் ஆரம்ப கல்விலிருந்து முன்னேற்றமடைவதற்கு இது ஒரு சான்றாக அமைகின்றது.

இலங்கையில் கல்வி மாற்று கொள்கைக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் பிரதமர் ஊடாக பாரிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரணம் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த பொழுது கல்வி வளர்ச்சிக்கான நன்மைகள் நன்கு அறிந்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று பிரதமர் என்ற வகையில் கல்வி முன்னேற்றத்திற்கு பாரிய நிதி பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.

இந்த நாட்டில் சீ. டபிள்யூ. டபிள்யூ கணங்கர அவர்களால் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் மலையகத்தில் உள்ள பாடசாலைகள் அரசாங்கமயப்படுத்தப்பட்டது. அதேபோன்று மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது.

இவ்வாறாக கல்வி வளர்ச்சிக்கென பாரிய பங்களிப்புகள் எமக்கு கிடைத்தன. இன்று கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவிலிருந்து மேலோங்க நல்லாட்சி அரசாங்கம் இதற்கான வளங்களை வழங்குவதற்கு பாரிய நிதி ஒதுக்கீடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

இன்று மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவாக தேவைப்படுகின்றனர். இதற்கு கல்வி கலாசாலைகள் மூலமாகவே இவர்களை உருவாக்க கூடிய சக்தி இருக்கின்றது. அந்த வகையில் மலையகத்திற்கு ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி பாரிய சொத்தாக அமைந்துள்ளது.

இங்கு கல்வி கற்றவர்கள் இன்று இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், வெளிமாவட்டங்களில் பொலிஸ் அதிகாரிகளாகவும் பதவி வகிக்கின்றனர்.

அதேபோன்று இன்னும் பல உயர் பதவிகளை வகிப்பதற்காக இக்கல்லூரியின் ஊடாக கற்று வெளிவரும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி 1992ம் ஆண்டு முதல் இயங்கப்பட்டு வந்தாலும், பாரிய குறைபாடுகள் கடந்த காலங்களில் காணப்பட்டாலும், தற்பொழுது முன்னேற்றமடைந்துள்ளது.

ஆகவே ஆசிரியர் தொழில் என்பது கட்டயமான தேவையாக கருதப்படுகின்றது. எனவே இக்கல்வியற் கல்லூரியின் ஊடாக நல்ல ஆசிரியர்களை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் முழு இலங்கையிலும் உள்ள மாகாணங்களுக்கு சென்று கல்வியின் நிலைமையை அவதானிக்க வேண்டும். குறைபாடுகள் நீக்க வேண்டும் என்பது எனது கடமையாகும். ஆனால் இராஜாங்க
அமைச்சர் வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் சென்று கல்வி பணிகளை மேற்கொள்கின்றார் என்பதை பரப்பி வருகின்றனர். இதை ஏற்றுக் கொள்ளகூடிய விடயமல்ல. இந்த காலப்பகுதியில் கல்வியற் கல்லூரியில் கற்கின்ற மாணவர்கள் ஆசிரியராக வெளியே வருவதற்கு சிந்தித்து செயல்ப்பட வேண்டும்.

ஆகையால் கல்வியின் மாற்றத்தினை கொண்டு வர ஆசிரியர்களால் மாத்திரமே முடியும் என்பதை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com