நடை பழகும் மகிந்த நாட்டைப் பிடிக்க இடமளியோம் – அமைச்சர் திகா

Thikaநாட்டில் ஆட்சியினை குறுக்கு வழியில் கைப்பற்ற முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எந்த பகுதியிலிருந்து நடை பழக பாதை யாத்திரை சென்றாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 28 தோட்டங்களைச் சேர்ந்த 472 தொழிலாளர் குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் 30.07.2016 அன்று நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் தோட்ட அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு இணைவாக முதல் கட்டமாக 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை பெற்று வெற்றி கண்டுள்ளோம். இந்த வெற்றியானது அரசியலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என தெரிவித்த அவர் தோட்ட தொழிலாளர்கள் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கிய அங்கீகாரத்தின் சக்தியை கொண்டு அரசாங்கத்தில் அமைச்சராக அமர்ந்த நாம் 2500 ரூபாவை பெற்று விட்டோம். மாற்று கட்சிகள் கூறியவாறு 1000 ரூபாவை பெற்று தர வேண்டும்.

இடைக்கால கொடுப்பனவை பெறுவதை தடுக்க மாற்று கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தோட்டம் தோட்டமாக சென்று தடுக்க நினைத்தாலும் இதனை ஏற்றுக்கொள்ளாது வழங்கப்பட்ட தொகையை அணைவரும் பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை மாற்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அநாகரீகமாக பேசி ராதா, திகா, மனோ மூவரும் ஒன்று சேர்ந்து நாமம் போட போகின்றார்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் யார் நாமம் போடப்போகின்றார்கள் என்பதை விரைவில் தெரியவரும்.

கடந்த கால அரசியலில் எனக்கு நேர்ந்தவை என் மனதைவிட்டு அகழவில்லை என தெரிவித்த அமைச்சர் மஹிந்தவுக்கு ஆதரவை தெரிவித்துவிட்டு மைத்திரியிடம் அமைச்சு பதவி கேட்டு நிக்கின்றனர்.
பலம் இல்லாத காலத்தில் மக்களிடம் வாக்கு கேட்ட எனக்கு பலம் இருக்கின்ற இந்த வேளையில் அமைச்சு பதவி கொடுக்க நான் விடுவேனா? என ஆக்குரோஷம் அடைந்தார். அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்தில் மார்பை நிமிர்த்தி உள்ளது. இதுவரை மலையக மக்களுக்கு செய்யாத சேவையை நாம் செய்து வருகின்றோம். 7 பேர்ச்ச காணி தனி வீடு என்பது நல்லாட்சியில் நாம் பெற்ற உரிமை. இதை யாரும் கொச்சைப்படுத்த தேவையில்லை.

மலையக மாற்றத்திற்கான சக்தியாக இவைகளை நாம் பெற்றுள்ளோம். ஆனால் 10 பேர்ச் வேண்டும் என மக்களை தூண்டிவிடுபவர்கள் இதுவரை எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை. 20 பேர்ச் வேண்டுமானாலும் பெற்றுக்கொடுக்க நான் தயார். தோட்ட அதிகாரிகள், கம்பனியின் அதிகாரிகள் திகாம்பரத்துக்கு ஆதரவு இதனால் சம்பள பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என சொல்லி வருபவர்கள் ஓர் இரு தினங்களுக்கு முன் தோட்ட அதிகாரிகளை அழைத்து விருந்துபசாரங்கள் செய்துள்ளனர் என்பது வேடிக்கையான விடயமாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும் தொழிலாளர்கள் ஏமாந்து வந்த காலம் போய்விட்டது. அவர்கள் விழித்துக்கொண்டனர். இனிமேலும் ஏமாற்ற வருபவர்களை அவர்கள் விரட்டி அடிப்பார்கள். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு, செலவு திட்ட காலத்தில் 50,000 வீடுகள் மலையகத்துக்கு தருவேன். தேயிலையை கழட்ட விட மாட்டேன் என சொன்னார்.

ஆனால் இன்று இந்நிலை மாறியுள்ளது. இவ்வாறெல்லாம் சொன்ன அவர் மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்டு நடை பழக பாத யாத்திரை செல்கின்றார்கள். குறுக்கு வழியில் செய்த ஊழல்களை மறைக்க ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றார். ஆனால் எதிரவரும் 4 ஆண்டுகளுக்குள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com