தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் 8வது முறையாகவும் பேச்சுவார்த்தை

IMG_4072தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் 8வது முறையாகவும், பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நாம் முன்வைத்துள்ள சம்பள உயர்வுக்கு குறைவான தொகையை கம்பனிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதால் 620 ரூபாய்க்கு மேலதிகமாக பேச்சை நடத்த கம்பனிகளுக்கு தெரிவித்து வெளியேறியுள்ளோம்.

இந்த நிலையில் 17 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டுள்ள சம்பள பேச்சுவார்த்தையில் இ.தொ.காவின் சம்பள உயர்வு கோரிக்கைகளுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் காட்டாத பட்சத்தில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை தொழிலாளர்களுக்கு 17 மாதங்களுக்கான மீள் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கும் முதலாளிமார் சம்மேளனம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இடைக்கால கொடுப்பனவு மீள் கொடுப்பனவை அடிப்படையாக கொண்டு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

அத்தோடு இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து தஸ்த்தாவேஜிகளையும் எமக்கு முதலாளிமார் சம்மேளனம் ஆதரத்துடன் கையளித்துள்ளதாக இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சாமிமலை மீரியாகோட்டை விவசாய கிராமத்திற்கான 200 குடும்பங்கள் பயன்பெரும் 13 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மின்சாரம் வழங்கும் வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், பிலிப்குமார், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் உரை நிகழ்த்திய முத்து சிவலிங்கம் தெரிவித்ததாவது,

இன்னும் ஒரு காங்கிரஸை உருவாக்க முடியாது. இருக்கும் காங்கிரஸை எவராலும் அழிக்கவும் முடியாது. காங்கிரஸின் எதிர்காலம் நன்றாகவே இருக்கின்றது. அத்தோடு சக்தியாகவும் இருக்கின்றது. இதனை இலகுவில் அழித்து விட முடியாது.

நாம் கனவு கண்டால் அது நனவாக வேண்டும். விழுந்து கிடந்தால் மீண்டும் எழும்பவும் வேண்டும் என தெரிவித்த இவர் இ.தொ.கா ஸ்தாபனத்தை கட்டியமைக்க அமரர். ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானின் ஜனன தினம் 30.08.2016 அன்று கொண்டாடப்படுகின்றது.

எந்தவொரு கட்சி பேதமும் வேற்றுமையையும் காட்டாது மக்களுக்கென்ற சேவையை முன்னெடுத்து வந்த மாபெரும் தலைவருக்கு மக்கள் அணைவரும் விளக்கேற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

நியாயமான சம்பள உயர்வை இ.தொ.கா பெற்று தரும். இன்று ஆறுமுகன் தொண்டமானை பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் நாம் இன்று தைரியத்துடன் வாழ்கின்றோம் என்றால் இதற்கு காரணம் ஆறுமுகன் தான்.

2500 ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டமையினால் சம்பள உயர்வுடன் கிடைக்கபெரும் மீள் கொடுப்பனவுக்கு சிலர் ஆப்பு வைத்துள்ளனர். இது தொடர்பாக நாம் கேட்ட பொழுது அது வேறு இது வேறு என காரணம் காட்டுகின்றார்கள். ஆனால் அங்கே ஒப்பந்த அடிப்படையில் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் ஆதாரத்துடன் கையளித்துள்ளது.

இருந்தும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 2018ம் ஆண்டு வரை எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ள முடியாத நிலைக்கு சிலர் அரசியல்வாதிகளினால் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கம்பனிகள் தெரிவிக்கின்றன.

நாம் இ.தொ.காவூடாக சம்பள தொகை ஒன்றை முன்வைத்துள்ளோம். மாறாக இவ்வாறான காரணங்களை காட்டி முதலாளிமார் சம்மேளனம் நழுவி சென்று 500 ரூபாய் என்ற தொகைக்கு பேச்சை ஆரம்பிக்கின்றன.

ஆனால் நாம் 620 ரூபாவிலிருந்து பேச்சை ஆரம்பிக்கும் படி வழியுறுத்தினோம். இதற்கு இணங்காமையினால் பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்து வெளியேறியுள்ளோம்.

இருந்தும் எம்முடன் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்ட வேறு சிலர் உண்மை நிலைமையை தெரிந்து கொண்டும் வெளியில் வந்து வேறு ஒன்றை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளனர்.

இவ்வாறு அகம் ஒன்று புறம் ஒன்று என பேசி கிடைக்கப்பெறும் உரிமைகளை தடுத்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் மக்கள் சக்தியால் இயங்கி வருகின்றது. இதன் அருமை பெருமையை இங்குள்ள பெரியொர்கள் சொல்வார்கள்.

ஓர் அணியான கட்சி இருந்தால் அடுத்தவர்கள் ஏழனம் செய்ய மாட்டார்கள். இங்கு பல்வேறுப்பட்ட தரப்புகள் காணப்படுவதால் உரிமைகளை இழுத்தடிக்கும் நிலைக்கு மற்றவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் விடயத்தில் நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடத்தில் அதிகமாக கதைத்துள்ளோம். அண்மையில் பிரதமரிடம் பேசுகையில் பல்லாயிரம் ஏக்கர்களை கொண்ட தேயிலை நிலங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என இதன்போது வழியுறுத்தினோம்.

தனி ஒருவரிடம் இத் தோட்டங்களை கையளிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

தொழிலாளர்களுக்கு வீடு நிலம் உரிமையாக்கபட வேண்டும் என்பதில் இ.தொ.கா பின்வாங்கப்போவதில்லை. தேயிலை நிலங்களை பிரித்துக்கொடுக்கும் சூழ்நிலை வந்தால் அதனை எமது மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

தேயிலை நிலங்களை ஆளும் சூழ்நிலை வந்தால் இருக்கும் வதிவிடத்தையும் அதனை சுற்றிய காணியையும் அம்மக்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும் எனவும் வழியுறுத்தியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com