தோட்டத் தொழிலாளர் போராட்டத்திற்கு வடக்கு முதல்வர் ஆதரவு – சம்பள உயர்விற்கு வலியுறுத்து

CMநலிந்துபோன நிலையில் வாழுகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்நாட்டின் ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் ஒப்பான வகையில் அவர்களின் சம்பளங்களைத் திருத்தி அமைத்து வழங்க அரசாங்கமும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் பெருமனதுடன் முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி தமது சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையகத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கடந்த 12 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான கோரிக்கைகள் என்ற அடிப்படையில் அதனை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு நாங்கள் அரசையும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உத்தரவாதம் செய்தாலே அன்றி தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்ற நிலையில் நாளொன்றுக்கு 730/=  என்ற ரீதியில் சம்பளத்தை மாற்றியமைக்க தோட்டத் தொழிலாளர்கள் சங்கமும் முதலாளிமார் சம்மேளனமும் இணங்கியிருப்பது திருப்தியளிப்பதாக இல்லை.

இந்த நாட்டின் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்ற தொழில்களில் முன்னிலை வகிக்கக்கூடிய தேயிலை உற்பத்தி தொழிற்துறையின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் இருப்பிட வசதிக் குறைவுகள், குழந்தைகளின் பாடசாலை வசதியின்மை, சீதோஷ்ண நிலை போன்ற இன்னோரன்ன இடையூறுகளுக்கு மத்தியில் எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பெருந்தன்மையுடன் நோக்கப்படவேண்டியவை. பயிற்சி பெறாத ஒரு கூலியாள் கூட குறைந்தபட்ச நாட்கூலியாக ரூபா. 1000/=த்தைப் பெறுகின்ற இச் சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழில்த்துறையில் பயிற்சி பெற்ற இவர்களுக்கு நாளாந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு அவர்களின் சம்பளங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கையான 6 நாட்கள் தொழில் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்வதற்கு அரசு ஏற்ற நிர்வாகங்களுடன் கலந்துரையாட வேண்டும். நலிந்துபோன நிலையில் வாழுகின்ற இம் மக்கள் இந்நாட்டின் ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் ஒப்பான வகையில் அவர்களின் சம்பளங்களைத் திருத்தி அமைத்து வழங்க பெருமனதுடன் முன்வரவேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com