சற்று முன்
Home / செய்திகள் / தேவைக்கு அதிகமாக வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா

தேவைக்கு அதிகமாக வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற கண்ணகி மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது சொந்த இடங்களில் நீங்கள் மீளக்குடியமர வேண்டும் என்பதில் எவ்வளவு விருப்பத்துடன் இருக்கின்றீர்களோ? அதேபோன்றுதான் உங்களை உங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற அக்கறை எனக்கும் உள்ளது.

இதனடிப்படையில், கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த குறைந்த அரசியல் பலத்தைக் கொண்டும் அரசுடனான இணக்க அரசியலின் ஊடாகவும் குடாநாட்டில் படைத்தரப்பினர் வசமிருந்த 17 ஆயிரத்து 522 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்து அங்கு மக்களை மீளக்குடியேற்றியுள்ளோம்.

இது, மக்களிடம் நாம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்திக் காட்டியுள்ளதன் வெளிப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையே காணப்படுகின்றது. இதேவகையில் தான், இங்குள்ள இரு நலன்புரி முகாம்களைச் சேர்ந்த மக்களும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை இருந்து வருகிறது.

இங்குள்ள மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகளையும் துயரங்களையும் நான் நன்கு அறிவேன். அந்த வகையில்தான், இந்நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு உடனடியாகவே சேதமடைந்துள்ள குடியிருப்புகளின் கூரைகளைப் புனரமைப்பது, சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுப்பது, மலசலகூடங்களின் வசதிகளை மேலும் பெற்றுக் கொடுப்பது, மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது என்பனவற்றுடன் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையிலும் அல்லது தற்போதிருக்கின்ற காணிகளைக் கொள்வனவு செய்து அவற்றை குடியிருக்கும் மக்களுக்கு உரித்தாக்குவது வரையில், அந்த மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படுமென கூறியதோடு, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதைப் போல், நாளாந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது அரசியல் முயற்சியாக இருந்து வந்துள்ளது என்றும் கூறினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com