தேர்தல் வாக்குப் பெறும் விளம்பரங்களிற்காக பொது நிகழ்வுகளில் நான் பங்கேற்பதில்லை – முதலைமச்சர் விக்கினேஸ்வரன்

CM-1தேர்தலில் வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ விளம்பரத்திற்காகவோ பொது நிகழ்வுகளில் தான்கலந்துகொள்வதி்ல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் உரைகளில் கூறப்படுகின்ற பல விடயங்கள் எமது சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே எத்தனையோ வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பு – 2016
இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில்  2016.11.19 சனிக்கிழமை நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதி உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரது உரையின் முழு வடிவம்வருமாறு,
குருர் ப்ரம்மா…………………………………
தலைவர் அவர்களே, மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திருகுருகுலராஜா அவர்களே மற்றும் இங்கே கலந்துகொண்டிருக்கும் கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, திணைக்கள அதிகாரிகளே, உத்தியோகத்தர்களே, சகோதர சகோதரிகளே, எனதினிய மாணவச் செல்வங்களே!
2016ம் ஆண்டிற்கான சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. அவற்றின் முதலாவது நிகழ்வில் கலந்துகொண்டு இங்கே கூடியிருக்கும் மாணவ செல்வங்களுக்கு மத்தியில் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
கூட்டங்களிலும் பொதுமக்கள் ஒன்றுகூடல்களிலும் நாம் உரையாற்றுவது கைதட்டல்களுக்கும் மகிழ்ச்சி ஆரவாரங்களுக்குமாக அல்ல. எமது உரைகளில் கூறப்படுகின்ற பல விடயங்கள் எமது சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே எத்தனையோ வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம். சிலர் எமது பேச்சுக்கள் தற்பெருமைக்காக ஆற்றப்படுகின்றன என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அவ்வாறான காரணங்களில் ஈடுபடுகின்றார்களோ நானறியேன். எமது கரிசனைகளும் கருத்துக்களும் மாணவர்கள் மத்தியில் கூடுதலாகச் சென்றடையும், சென்றடைய வேண்டும் என்ற காரணங்களினாலேயே பாடசாலை சிறுவர்களையும் இளவயதினர்களையும் கருத்தில் வைத்து அவர்களின் எதிர்காலம் அவர்களின் கல்வி முயற்சி போன்றவை சம்பந்தமான அறிவுரைகளை எமது உரைகளில் சேர்த்துக் கொள்கின்றோம்.
அடுத்த தேர்தலில் அவர்களின் வாக்குகள் எமக்குக் கிடைக்கக் கூடும் என்ற காரணத்துக்காகவோ எம்மை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் கருதியோ நாங்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. எமது வேலைச் சுமைகளைத் தாங்கிக் கொண்டு இப்பேர்ப்பட்ட கூட்டங்களில் நாம் கலந்து கொள்கின்றோம் என்றால் எமது மக்களின் வருங்காலம் பற்றி அக்கறை கொண்டுள்ளோம் என்று அர்த்தமே ஒளிய எமது குரல்களை நாமே கேட்பதில் எமக்கு ஈடுபாடு என்று அர்த்தமில்லை.
இன்றைய இந்த சாதனையாளர்கள் கௌரவிப்பில் பலர் சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் பெற மகிழ்வுடன் காத்திருக்கின்றீர்கள். உங்களை ஊக்கப்படுத்துவதற்கும், வெற்றியாளர்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாணவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் தம்மையும் வெற்றியாளர்களாக அல்லது சாதனையாளர்களாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு தூண்டுதல் சக்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே கல்வித் திணைக்களம் இவ்வாறான நிகழ்வுகளைப் பெருந்தொகைப் பணச் செலவில் வருடாவருடம் நடாத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்.
போட்டிகள் எம்மை உற்சாகப்படுத்துகின்றன. உசுப்பேற்றுகின்றன. அதன்மூலம் எமது அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்கின்றோம். கல்வியிலும் விளையாட்டுக்களிலும் போட்டிகள் வைப்பதால் எமது திறன்களை நாம் மேம்படுத்துகின்றோம். ஆனால் போட்டிகள் எமக்குச் சுமையாக மாறக் கூடாது. வெற்றி என்பது மகிழ்வைத் தரவேண்டும். மமதையைத் தரப்படாது. தோல்வி என்பது அடுத்த வெற்றிக்குப் படியாக அமைய வேண்டும். படிப்பனையாக அமைய வேண்டும். பரிதாபம் அடைய வைக்கக் கூடாது. பரிதவிக்க இடமளிக்கலாகாது.
இங்கே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்தியடைந்த முதல் 15 பேருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படவிருக்கின்றார்கள் என அறிகின்றேன். இந்த புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பாக நாம் சற்று ஆராயவேண்டியுள்ளது. குழந்தைகiளின் சின்னஞ்சிறு வயதில் அவர்களைப் போட்டியில் ஈடுபடுத்துகின்றோம்.
பெற்றோர்களின் போட்டி மனப்பான்மையை நாங்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றோம். பல திறமை மிக்க மாணவர்கள் கூடுதலான அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்கள். அதாவது வீட்டில் நெருக்கடி அவர்களுக்கு, பாடசாலையில் நெருக்கடி, ரியூசன் வகுப்பில் நெருக்கடி, என தொடர்ச்சியான பல நெருக்கடிகளினால் பலருக்குப் பாடங்களில் வெறுப்பு ஏற்பட்டு பரீட்சைகளில் அவர்கள் துர்அதி~;டவசமாகக் கோட்டைவிட்டு விடுகின்றார்கள். இது பற்றி ஆராய்ந்த போது ஆண்டு 05 மாணவர்கள் மீது அளவுக்கு அதிகமான கரிசனை எடுத்து மிகக் கூடுதலான நேரத்தைக் கற்பித்தலுக்கு உள்ளாக்கி மாணவர்களுக்கு கல்வியின் மேல் இயல்பாகவே ஒரு வெறுப்பை கொண்டுவரக் கூடியவாறு பெற்றோர்களும் மற்றோர்களும் நடந்து கொள்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில் சிறுவர்கள் விளையாட்டுடன் கூடிய கல்வி முறைக்கு மாற்றப்படல் வேண்டும். ஏட்டுக் கல்வியுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. செயன்முறை ரீதியாக மாணவர்களுக்கு இயற்கையுடன் கூடிய அறிவை உட்புகுத்த வேண்டும். கல்வி மாணவர்களுக்குச் சுமையாக அமையக் கூடாது. பரீட்ச்சைகளில் தோல்விகண்ட எத்தனை மாணவ மாணவியர் தமது உயிர்களை மாய்த்துள்ளார்கள்? மாணவ மாணவியர் மீது அவர்களின் சூழல் ஏற்படுத்தும் நெருக்குதல்களே இவ்வாறான தற்கொலைகளுக்குக் காரணம். சுமார் 66, 67 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இந்தப் புலமைப் பரீட்சைகளில் ஈடுபட்ட போது இந்திய உபகண்டம் பிரிவினைக்கு உள்ளாகியது. ஒரே நாடாக இருந்த இந்தியா பாரதமாகவும் பாகிஸ்தானாகவும் பிரிந்தன. அப்போது பரீட்சைக்குத் தோற்றிய தமது குழந்தைகளுக்கு அவர்களின் தாய் தந்தையர் கூறியது “பிள்ளைகளே! வந்தா வா போனால் பாகிஸ்தான் என்று பரீட்சையில் எழுதுங்கள். பயப்படாதீர்கள். இந்தப் பரீட்சையால் குடி முழுகிப் போவதில்லை” என்று. அவ்வாறு கூறியதால் மாணவ மாணவியரிடையே மனச்சுமை குறைந்திருந்தது. போட்டி பொறாமைகளிலும் பார்க்க அறிவு விருத்தி அடைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அப்போதெல்லாம் மாணவ தொகைகளும் கட்டுக்கடங்கியிருந்தன. இன்று போட்டி பொறாமை வெகுவாக மாணவ மனங்களைப் பாதிப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் அதே நேரம் பரீட்சையில் தோற்றுகின்ற ஒரு தொகுதி மாணாக்கர்களின் திறமைகள் வியப்பைத் தருவதாக இன்றுள்ளது. இரண்டு பாடங்களில் மொத்தமாக 200 புள்ளிகளில் 195 புள்ளிகள் அல்லது 196 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியடைகின்ற அந்த மாணவ மாணவியர் எவ்வளவு விடயங்களை அவர்களின் அந்தப் பிஞ்சு மனங்களில் தேக்கி வைத்திருக்கின்றார்கள் என நான் பல முறை வியந்ததுண்டு. அதே நேரம் அம் மாணவ மாணவியரை பல்கலைக்கழக இறுதித் தேர்வை முடித்த பட்டதாரிகள் போன்று உடைகள், தொப்பிகள் அணிந்து போட்டோக்கள் எடுத்து பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி “உமது எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது?” என்ற வினாவிடைப் போட்டி வைத்து ஒன்றும் அறியாத பிஞ்சு உள்ளங்களில் போட்டி பொறாமை உணர்வுகளையும் தான் என்ற ஆணவ உணர்வுகளையும் உருவாக்கி அவர்களின் மேற்படிப்புக்களில் தாக்கங்களை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளில் சில பெற்றோரும் அதற்கேற்ப சில பாடசாலை சமூகங்களும் ஈடுபடுவது வருத்தத்தைத் தருகின்றது. இதற்கு மாறாக நாங்கள் இம் மாணவ மாணவியர் மேலும் மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு உயர் கல்விகளில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களின் அறிவு விருத்தி சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய முதல் 10 மாணவர்கள் வீதம் ஆண் பெண் 08 குழுக்களிலும் மொத்தம் 160 பேர் வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அதுவும் வரவேற்கத்தக்கதொன்று. சதுரங்கப் போட்டிகள் மாணவர்களின் உளவிருத்திக்கும் சிந்தனை விருத்திக்கும் மிகவும் உதவுவன. அந்த வகையில் கூடுதலான மாணவ மாணவியர் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பது சிறந்த ஒரு கல்வி சமூகம் உருவாக்கப்படுவதற்கான ஒரு முன்மாதிரி நிகழ்வாக கொள்ளப்படலாம்.

இவற்றுக்கும் மேலாக கணித வினாடி வினா போட்டிகளில் தேசிய மட்டம் மாகாண மட்டங்களில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளும் இங்கே வெற்றியாளர்களாக கௌரவிக்கப்படுவது எதிர்காலத்தில் கணித வல்லுனர்களை உருவாக்குகின்ற ஒரு செயற்பாடாக அமையும் என்று கருதலாம். ஒரு நாட்டின் பொருளாதார விருத்தி அந்த நாட்டில் காணப்படும் பொறியியலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றதென்று கூறுவார்கள். வைத்தியர்களைப் பழிக்க முற்படும் பொறியியலாளர்கள் நாட்டில் காணப்படுகின்ற வைத்தியர்களின் எண்ணிக்கை அந்த நாட்டின் நோய்த் தாக்கத்தின் அளவுச் சுட்டியாக கொள்ளப்படலாம் என விகடமாகக் கூறுவார்கள். அதே போன்று கூடிய சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள் என்றால் அந்நாட்டின் குற்றச் செயல்கள் அதிகம் என்று பொருள்படும் என்பார்கள்.
அன்புள்ள மாணவச் செல்வங்களே! சிறு வயதில் இருந்தே கணிதம், விஞ்ஞானம், பொது அறிவு, புவியியல், குடியியல், ஆங்கிலம், தமிழ் என்று பல பாடங்களில் மிகக் கூடிய கவனம் எடுத்து உங்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த கல்விமான்களாகவும் வருங்காலத் தலைவர்களாகவும் உருவாவதற்கு இன்றில் இருந்தே நீங்கள் திடசங்கற்பம் பூணுதல் வேண்டும். விஞ்ஞான வினாடிவினாப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவியர், சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பங்குபற்றியவர்கள் மற்றும் வணிகம், விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் பங்குபற்றியவர்கள் எமது மாணவர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு பரிசில்களைப் பெற்றிருக்கின்றார்கள் என்ற கருத்தை உலகிற்கு அறிவிக்கின்றார்கள்.
கல்வி என்பது வற்றாத நீரூற்றுப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத ஒரு செல்வமாக அது அமைகின்றது. ஆனால் நாம் பயனடைய ஆழமாகத் தோண்ட வேண்டும். கல்வி என்ற சொல்லின் அர்த்தமே ஆழமாகத் தோண்டுதல் என்பதே. கல்லுதல் என்றால் தோண்டுதல். ‘வி’ என்ற சொல் ஆழத்தையும் அகலத்தையும் குறிக்கும். ஆகவே தோண்டத் தோண்ட நீர் வருவது போல் நாம் சிந்திக்கச் சிந்திக்க எமது கல்வி மேம்படும். அறிவு விருத்தியடையும்.
இவ்வளவு இன்னல்கள், இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்னும் தமிழ் இனம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று சொன்னால் எம்மிடையே காணப்படும் அடிப்படைத் தகைமையாகிய கல்வி மீதான ஈடுபாடே அதற்கு மூல காரணம் ஆகும். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் நேரங்களில் கூடுதலான அளவை வெறுமனே வீண் பொழுதாகக் கழிக்காமல் கல்வி நடவடிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடுங்கள். அவ்வாறு ஈடுபட்டால்த்தான் நாம் ஒரு சிறந்த கல்வி சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க முடியும். உங்களுடன் கல்வி கற்கின்ற மாணவ மாணவியர் யாராவது தெரிந்தோ தெரியாமலோ வீணான தீய பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணம் ஆகியவற்றை கொண்டவர்களாக விளங்குவார்களேயாயின் அவர்களைத் திருத்துவது மாணவ சமுதாயத்திற்கும் உரியதான ஒரு பணியாகும் என்று கூறி வைக்கின்றேன். முடியுமானால் நீங்களே புத்தி கூறி அவர்களைத் திருத்த முயற்சி செய்யுங்கள். இயலாதவிடத்து உங்கள் ஆசிரியருக்கோ அல்லது அதிபருக்கோ தெரிவித்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு முயலுங்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் சமூகம். எம்முட் சிலர் பின்தங்க நாங்கள் விடக் கூடாது. எல்லோரும் சேர்ந்து முன்னேற நாங்கள் வழி அமைக்க வேண்டும். இது ஒரு மகத்தான கைங்கரியம். சேர்ந்து முன்னேறுவோம் என்ற கருத்தை உங்கள் முன் வலியுறுத்தி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com