சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலின் இறுதி நேரத்திலும் வன்முறைக்கு இடமளிக்க முடியாது. 87 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுப்பு

தேர்தலின் இறுதி நேரத்திலும் வன்முறைக்கு இடமளிக்க முடியாது. 87 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுப்பு

(15.08.2015) இறுதிக்கட்ட நேரத்திலும், தேர்தல் வன்முறைகளுக்கு இடமே கொடுக்காத வகையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்க முடியாது என 87 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட ஒருவருக்கான பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்ட பிணை மனு வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 
தேர்தல் வன்முறைகளற்ற அல்லது தேர்தல் வன்முறைகள் குறைந்த மாவட்டங்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் திகழ்வதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில்; இறுதிக்கட்ட நேரத்திலும், வன்முறை இடம்பெறக்கூடாது. பொது மக்கள் அச்சப்படும் நிலை உருவாகிவிடக் கூடாது. ஜனநாயக ரீதியான வாக்குரிமையைப் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு கள நிலைமையை பொலிசார் அமைத்துக் கொடுக்கும் நிலையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு தேர்தல் இறுதிக்கட்ட வேளையிலும் பிணை வழங்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் 87 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை, . அந்தப் போதைப்  பொருளை விற்பனை செய்தமை என்ற குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற கட்டளையில் விளக்கமறியலில் இருந்து வருகின்றார். 
இந்த நபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்  பிணை மனு தாக்கல் செய்த சட்டத்தரணி, அவருடைய குடும்ப நிலைமைகளை எடுத்துக் கூறி, விளக்கப்படுத்தி பிணை விண்ணப்பம் செய்தார். 
அதனை செவிமடுத்து, நீதிபதி இளங்செழியன் அப்போது தெரிவித்ததாவது: 
சாதாரண குற்றங்களுக்கு பிணை கோரி பெற்றுக்கொள்வது எதிரிக்கு உரிய உரிமையாகும். சரியான காரணங்களின் அடிப்படையில் மன்று அதனை மறுக்கலாம். போதை வஸ்து கட்டளைச் சட்டத்தின் படி போதை வஸ்துடன் கைது செய்யப்படும் நபருக்கான பிணையானது, அவருடைய உரிமையில்லை. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே பிணை வழங்க முடியும் என்று சட்டம் பரிந்துரைக்கின்றது. ஆனால், இந்த பிணை மனுவில் அத்தகைய விதிவிலக்கான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை. அத்துடன், 87 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்தது, விற்பனை செய்தது என்பதற்காக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பாரதூரமான குற்றச்சாட்டாகும். இக்குற்றத்திற்கு தேர்தல் காலத்தின் இறுதிக்கட்டம் தானே என கருதி, பிணை வழங்கினால், அது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும். 
தேர்தலின் இறுதிக்கட்டமே மிகவும் முக்கியமானதாகும். அதுவும் வாக்களிப்பு தினம் மிக மிக முக்கியமானதாகும். மக்கள் எதுவிதமான அச்சமும் இல்லாமல், சுதந்திரமாக நடமாடும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். சுதந்திரமாக வாக்களிப்பதற்கான கள நிலைமை பேணப்பட வேண்டும். அத்துடன், இக்கால கட்டத்தில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது. மேலும் தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிசாருக்கு உதவியாக இருத்தல் வேண்டும் என்பவற்றை மன்று கவனத்திற் கொண்டு தேர்தலின் இறுதிக் கட்டமாக இருந்த போதிலும் பிணை வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com