தேமுதிக 124 – மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி!

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நலக்கூட்டணிக்கு 110 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு முன்பாகவே, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த்தை நேரிடையாகவே சந்தித்து கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்குதான் வருவார் என்று பாஜக கூறிவந்தது.

இதனால் திமுகவில் சேருவாரா அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேருவாரா, பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் இடையேயும், அரசியல் கட்சிகள் இடையேயும் நிலவியது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார். மேலும், எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறிவிட்டார். இந்த அறிவிப்பு திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் கருணாநிதி நம்பிக்கையை இழக்காமல், திமுக கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்பதில் நம்பிக்கை இழந்து விடவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியை சேர்ந்த வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
 
பின்னர் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். இந்த சந்திப்பில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்து செயல்படுவது என்றும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகமும், மக்கள் நலக்கூட்டணியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதென்றும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் 124 தொகுதிகளில் போட்டியிடுதென்றும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவதென்றும் இன்று (23.3.2016) முடிவு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com