தேசிய நல்லிணக்கம் பற்றி முதலில் தென்னிலங்கைக்கு புரியவைக்கவேண்டும் – ஜனாதிபதி

 
நாங்கள் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள். முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களிற்கே புரியவைக்கவேண்டும் அது அங்கிருந்தே தொடங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

நாங்கள் சமத்துவமாக எல்லோரும் வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். விரர்சனங்கள் செய்துவிட யாராலும் முடியும். ஆனால் ஒவ்வொருவருடைய பொறுப்பையும் அவர்கள் உணரவேண்டும். அரசு என்ற வகையில் வடக்கு மக்களிற்கு எமது முழுமையான ஒத்துளைப்பினை வழங்குவோம். வடக்கு மாகாண சபைக்கும் ஒத்துளைப்பு வழங்குவோம். எனவும் அவர்  தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்.

இன்றைய எனது யாழ் வருகை இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று வடபகுதி மக்களிற்கான 65 ஆயிரம் வீடுகளை வழங்கும் திட்டத்தைப் பார்வையிடுதல் மற்றயது காணிகளை இழந்த மாக்களிற்கான காணி மீளளித்தல் நிகழ்வு. 

கடந்த மாதம் சாரணர்களிற்கான ஜம்போறி நிகழ்விற்காக யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அங்கு தென்பகுதி மாணவர்களும் வடபகுதி மாணவர்களும் ஒன்றாக மகிழ்வோடு இருந்ததைக் கண்டேன். 
வடபகுதி மக்கள் துன்பங்களோடு வாழ்வதை உணர்கிறேன்.  ஆனால் இப்பகுதி மக்கள் கஸ்ரப்பட்டு உழைக்கிறார்கள். எமது நாட்டின் ஒன்பது மாகாணங்களும் ஒரேமாதிரியாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும். 26 வருட யுத்தத்தால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன. யுத்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதோடு ஏழ்மை நிலையும் ஏற்பட்டது. நாடெங்கிலும் யுத்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. யுத்தத்தின் வலியை இப்போதும் உணர முடிகிறது. யுத்தத்தின் விளைவுகளை எல்லோரும் புரிந்துகொண்டுள்ளனர். 
யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களிற்கு நாங்கள் இன்னமும் கூடிய உதவிகள் செய்யவேண்டியுள்ளது. அதன் ஒரு அங்கமாக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். தெல்லிப்பளையில் அதற்காக அமைக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந்தேன். 
முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வீட்டுத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களுடைய விவாதம் தேவையற்றது. இந்தவீடுகளில் நானோ, விக்கினேஸ்வரனோ, சுவாமிநாதனோ தங்கப்போவதில்லை. இவ் வீடுகளில் மக்களே தங்கப்போகின்றார்கள். மக்கள் விரும்பும் வீடுகளையே நாம் கட்டிக்கொடுக்கவேண்டும். 
மாகாண அரசுடன் இணைந்து வீட்டுத்திட்டம் தெடர்பாக விரைவில் மக்களின் கருத்துக்களைப் பெற்று அவைபற்றி நாங்கள் ஆராய்வோம். 
மாதிரி வீட்டினைப் பார்க்கச் சென்றபோது பல்வேறு மக்களைச் சந்தித்தேன். தமது காணிகளைத் தருமாறே அவர்கள் கேட்கின்றார்கள். அவர்கள் வேறு ஆட்களின் காணிகளைக் கேட்கவில்லை. தமது காணிகளைஐய கேட்கின்றார்கள். அவர்களது காணிகளை அவர்களிற்கு வழங்கும் பொறுப்பு எமக்கு இருக்கிறது. எதிர்வரும் மாதங்களில் காணிகளை வழங்கும் வேலையை பூர்த்திசெய்யவேண்டியிருக்கிறது. 
நத்தாரிற்கு யாழ்ப்பாணம் வந்தபோது 2016 யூன் மாதத்திற்குள் மக்களது காணிகளை வழங்குவேன் எனக் கூறினேன். எனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற இன்னும் மூன்று நான்கு மாதங்கள் தேவை. இதற்காக அனைவரது ஒத்துளைப்பையும் எதிர்பார்க்கின்றேன். 
ஐ.நா மனித உரிமைப்பேரவைத் தலைவர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அவரது முதல் கோரிக்கை மக்களது மீள்குடியேற்றம் பற்றியதாகவே இருந்தது. எனவே இந்த முக்கிய விடையத்திற்கு முன்னுரிமை அளிப்பேன். 
இதனை தென்னிலங்கையில் சிலர் தவறாக சித்தரித்து தவறாகப் பேசுகின்றார்கள். இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் முன்னர் கூறியதுபோலவே கூறுகின்றேன். இங்கு வந்து இந்த மக்களின் துயரங்களைப் பாருங்கள். 
நாங்கள் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள். முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களிற்கே புரியவைக்கவேண்டும். தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுகின்றார்கள். 
நாங்கள் சமத்துவமாக எல்லோரும் வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். விரர்சனங்கள் செய்துவிட யாராலும் முடியும். ஆனால் ஒவ்வொருவருடைய பொறுப்பையும் அவர்கள் உணரவேண்டும். அரசு என்ற வகையில் வடக்கு மக்களிற்கு எமது முழுமையான ஒத்துளைப்பினை வழங்குவோம். வடக்கு மாகாண சபைக்கும் ஒத்துளைப்பு வழங்குவோம். 
முதலமைச்சர் தனது உரையில் கூறிவற்றை நான் மனதில் உள்வாங்கினேன். அவர் பல விடையங்களைக் கூறினார். அவை தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com