தேசிய நல்லிணக்கத்துக்கு வலுவூட்டுகின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு

36fead4ff930ef5d71024063a6c9c075_L“தமிழ் சிங்களப்புத்தாண்டு தேசிய நல்லிணக்கத்துக்கு வலுவூட்டுகின்ற ஒரு முக்கிய பண்டிகையாகும். இந்தவேளையில் ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக்கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்படப் பிரார்த்திப்பதாக”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: இலங்கைவாழ் இந்துக்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இவ் இரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவமளித்து இப்பண்டிகையை கொண்டாடுவது வழமையாகும்.

 

இப்புத்தாண்டில் இவ்விரு சமூகங்களும்குறிப்பிட்ட ஒரு சுப நேரத்தில் உணவு சமைத்து உண்பது ஏனைய எந்தவொரு நாட்டவரிடமும்காணமுடியாத ஒரு சிறப்பான அம்சமாகும். அத்தோடு புத்தாண்டானது, அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும். சித்திரைப் புத்தாண்டில் இவ் நற்குணங்களை செயலில் காட்டி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

 

சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்கு பயணிப்பதை குறித்து நிற்கின்ற அற்புதமான ஒரு பண்டிகையாகவும் சித்திரை வருடப்பிறப்பை குறிப்பிடலாம்.

 

புத்தாண்டில் புதுப்பொலிவுபெறும் இயற்கையுடன், எமது தொடர்புகளையும் புதுப்பிக்கும் ஒர் அபூர்வ சந்தர்ப்பமாகவும் இப்புத்தாண்டு அமைகின்றது. விருந்தோம்பல் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற மங்களகரமான இந்நிகழ்வை தேசிய நல்லிணக்கத்திற்கு வலுவூட்டுகின்ற முக்கிய பண்டிகையாகவும் கொள்ளலாம்.

 

இவ்வேளையில் அனைத்து இல்லங்களிலும் மங்கள ஒளி பிராகாசித்து, அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து, பகைமை உணர்வு தணிந்து, தம் அயலவர்களை கருணை உள்ளத்துடனும்,கனிவு மனதுடனும் பார்க்கப் பழகும், நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக, இச் சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டுமென மனமார பிரார்த்திக்கிறேன்.

 

ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற ரீதியில், பேதங்களும் பாகுபாடுகளும் இல்லாத, போதைப்பொருள் மற்றும் மதுபானப் பவனை அற்ற, ஒரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் வகையில் இச் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட உறுதி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com