சற்று முன்
Home / செய்திகள் / தேசிய அரசு தொடரும் !!

தேசிய அரசு தொடரும் !!

சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்காமல் ஒரே குழுவாக செயற்பட தீர்மானித்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசாங்கத்தில் பாரிய மாற்றமொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டில் இக்குழு தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.”நடைமுறையிலிருக்கும் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும் என்பதே சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் உறுதியான நிலைப்பாடு. நாம் எமது நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தோம். எனினும் எமக்கு அது தொடர்பில் சாதகமான பதில் கிடைக்க வில்லை. என்றபோதும் நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.” என்றும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.இதேவேளை, நடைமுறையிலிருக்கும் அரசாங்கத்தில் மாற்றம் செய்வதற்கு ஏதுவான காரணங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தகுந்த விளக்கங்களை அளித்திருப்பதாகவும் அவை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறானாலும் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எச்சந்தர்ப்பத்திலும் பிரியப்போவதில்லையென்றும் அவர் ஆணித்தரமாக கூறினார். அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும். ஆனாலும் அதனை சட்டரீதியாக அரசியலமைப்புக்கு அமைய முன்னெடுக்கவே நாம் விரும்புகின்றோம்.எமது நிலைப்பாடு பூர்த்தியடையும் வரையில் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் நாம் போராடுவோம். எமது கோரிக்கை நிறைவடையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு என்றும் பக்கபலமாக இருக்குமே தவிர எந்தவொரு அரசியல் இலாபத்துக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவ மாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார். அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்க இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது;-

இன்று நாம் ஜனாதிபதியை சந்தித்து நீண்ட நேரம் விரிவாக பேச்சு நடத்தினோம். இதன்போது சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்காமல் ஒரு குழுவாக செயற்படுவதற்கு தீர்மானித்தோம். நாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பக்கபலமாக இருப்போம். அரசியல் இலாபத்துக்காக கட்சி விட்டு கட்சி தாவ மாட்டோம். ஆனாலும் நடைமுறையிலுள்ள அரசாங்கத்தில் எமக்கு மாற்றம் வேண்டும். ஜனாதிபதியிடமிருந்து எமக்கு இதற்கான பதில் கிடைக்காதபோதும் நாம் எமது நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. தொடர்ந்தும் அமைதியான முறையில் இதற்காக போராடுவோம். சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இதற்கு சாதகமான சில விளக்கங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

தயாசிறி ஜயசேகர

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழு நேற்றைய தினம் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி பாராளுமன்ற குழு அத்தீர்மானத்தை எடுத்துள்ளது. கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகுவது என்ற முடிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்கனவே இருந்தபோதும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அரசாங்கத்தோடு தொடர்ந்தும் இருப்பது என்ற முடிவை மேற்கொண்டுள்ளது. அத்தோடு அரசாங்கத்தில் தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பில் வலியுறுத்துவது என்ற தீர்மானத்திலும் அக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com