தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

courtபொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், தேசிய அரசாங்கம் அல்ல என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிரதம நீதியரசர் கே.பவன் மற்றும் நீதியரசர்களான சிசிர.டீ.அப்ரூ மற்றும் உபாலி அபேரட்ன ஆகியோர் கொண்ட குழு இந்த மனுவை நிராகரித்துள்ளது.

பாராளுமன்ற விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறியே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, கே.கனகேஸ்வரன் மற்றும் சுரேன் பெர்னாண்டோ ஆகியோர், தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம். எனவே உச்ச நீதிமன்றம் இது குறித்த மனுவை விசாரிக்க முடியாது என வாதிட்டனர்.

எனவே தொடர்ந்தும் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர.டி.சில்வா சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண ஆகியோர் மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்தனர். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக டுமினி.டி.சில்வா, கலாநிதி அவந்தி பெரேரா ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

அரசியலமைப்பின் 46(1), (5) ஆகிய சரத்துக்கள் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஐவிட அதிகரிக்கக் கூடாது என்றும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐவிட அதிகரிக்கக் கூடாது என்றும், தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களைக் கொண்டு அமைக்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கமானது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்திருப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான நிலையில் அமைச்சரவை அமைச்சர்கள் நாட்டின் அமைச்சர்களாகச் செயற்பட அதிகாரம், சட்டரீதியான அங்கீகாரம் அல்லாதவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டடிருந்தது.

அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதிப்பதானது அரசியலமைப்பின் 12(1) சரத்தின் கீழ் காணப்படும் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்திருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com