சற்று முன்
Home / செய்திகள் / தேசியப் பட்டியல் ஆசனம் அம்பிகாவுக்குத்தான் – அடம் பிடித்த சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஆசனம் அம்பிகாவுக்குத்தான் – அடம் பிடித்த சுமந்திரன்

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் தேசியப் பட்டியலில் அவரது பெயரை முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.

“இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின், எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் போட்டியிடும் ச.குகதாசனுக்கு தேசியப்பட்டியல் இடம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ள சூழ்நிலையில் சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆசனங்களைப் பங்கிடுவதென ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்திருந்தோம். அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் நியமனக் குழுவொன்றை நியமித்திருந்தது. அந்தக் குழுவின் கூட்டம் 3 தடவைகள் கூடியது. அதில் கூடிய 15 பேரின் முடிவாகவே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக எல்லா ஜனநாயகக் கட்சிகளுக்குள் இருப்பதை போல பலவித கருத்துக்கள் இருந்தாலும் இறுதியில் அனைவரின் சம்மதத்துடன் ஏகோபித்த முடிவாக எடுக்கப்பட்டது. தனிநபர்களின் முடிவாக அதைக் காண்பிப்பது தவறு. அந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெண் வேட்பாளர் சம்பந்தமாகவும் சர்ச்சை ஏற்பட்டது. பெண்கள் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கருத்து. நிறுத்தப்படும் பெண்கள் வெற்றி பெறக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் யாழ். மாவட்டத்திலும், மட்டக்களப்பில் நளினி ரட்ணராஜாவின் பெயரையும் நியமனக்குழு ஏற்றுக்கொண்டிருந்தது.

மட்டக்களப்பில் நாங்கள் ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, போட்டி போடுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. முடிவுகள் எடுக்கப்படாது உத்தியோகபூர்வமாக வெளியாக முன்னர் செய்திகள் கசிந்தமை துரதிஷ்டமான விடயம். நியமனக் குழுவில் இருந்தவர்கள் அதைச் சொல்லியிருக்கக்கூடாது.

மட்டக்களப்பு பெண் வேட்பாளர் நளினி ரட்ணராஜாவை குறிவைத்து மோசமான கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பெண்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை என்பதற்கு இது உதாரணமாகியது. அம்பிகா, சசிகலா பற்றியும் விமர்சிக்கப்பட்டது.

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை உற்சாகப்படுத்தி, அவர்களை அரசியலுக்கு வரவழைக்க வேண்டிய சூழலில் இப்படி நிகழ்ந்தமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கின்றோம்.

அம்பிகா இறுதிநேரத்தில் சொந்த காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதைக்கூட, அவரைக் கட்சி நீக்கியதாகவும், எதிர்ப்புக்கள் காரணமாக அவரைச் சேர்க்கவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன. அது அவரது தனிப்பட்ட முடிவு. போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் அவர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.

அம்பிகா எமது தேசியப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றைப் பார்க்கின்றபோது, அவரை யாழில் போட்டியிட இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் அவரைத் தேசியப் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் இருவருக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியிருந்தனர். அந்தப் போராட்டத்தை மகளிர் அணி நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அது தவறு. மகளிர் அணி, கட்சி நியமிக்கும் வேட்பாளர்களைத் தாங்கள் ஆதரிப்பார்கள் என்றும், போராட்டம் நடத்தியவர்கள் தன்னிச்சையாக நடத்தனர் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மதனி கையொப்பமிட்டுள்ளார்.

வேட்பாளருக்கு விண்ணப்பித்த சிலர்தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் துரதிஷ்டவசமானது” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com