தெற்கில் சிறைசெல்லக் காத்திருக்கும் சிலர் என்னை வைத்து அரசியல் அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் – முதலமைச்சர்

CMதெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்  1958ல் செனவிரத்ன எனும் ஒரு சிங்களச் சகோதரரை வெட்டித் துண்டு துண்டாக்கி மீன் பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால்த்தான் பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர்தான் அந்தச் செய்தி பொய் என்று தெரியவந்தது. ஆனால் அழிவு அழிவுதான் எனவே பொய்யான வதந்திகளை உருவாக்காதீர்கள் என கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சின் வழிநடாத்தலின் கீழ் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட  42 ஆவது தேசிய விளையாட்டு விழா
இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 2016.10.02 ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணியளவில் நடைபெற்றது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் உழு வடிவம் வருமாறு,

குருர் ப்ரம்மா…………………………………………………..
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களே, கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர அவர்களே, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் கூரே அவர்களே, பிரதி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, வடமாகாண கல்வி அமைச்சர் கௌரவ குருகுலராஜா அவர்களே, பாராளுமன்றப் பிரதிநிதிகளே, வடமாகாணசபை உறுப்பினர்களே, ஏனைய அதிகாரிகளே, இவ் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் இங்கே வருகை தந்திருக்கும் போட்டியாளர்களே, வீர வீராங்கனைகளே, எமது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
செப்ரெம்பர் 29ந் திகதி ஆரம்பமாகிய 42ஆவது தேசிய விளையாட்டு விழா நிகழ்வுகள் மூன்று தினங்கள் சிறப்பாக யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ள இத்தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
பேச்சாளர் பட்டியலில் எனது பெயர் முன்பு இடம் பெற்றிருக்கவில்லை. இறுதி நேரத்தில் என்னையும் பேசுமாறு அழைத்தமைக்கு நன்றி கூறுகின்றேன். ஒரு வேளை தெற்கிலே என்னை இப்பொழுது சித்திரித்துக் காட்டி வருவது என்னைத் தகாத ஒரு மனிதனாக ஏற்பாட்டாளர்கள் மனதில் எடுத்துக் காட்டியிருக்கக் கூடும். நான் வழக்கமாக பேச்சுக்களை எழுதியே வாசிப்பேன்.
என்னைப் பேயாகவும் பூதமாகவுந் தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிப்பதற்கு முன்னர் நான் அண்மையிலே பேசிய பேச்சை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ முறையாகச் சரிவர மொழிபெயர்த்து வாசித்து விட்டு, என்னை விமர்சித்திருந்தால் அதற்கான பதிலைத் தந்திருக்க முடியும். ஆனால் நான் சொல்லாததை எல்லாம் சொல்லி என்னை வைவது மனவருத்தத்தைத் தருகின்றது. 1958ல் செனவிரத்ன எனும் ஒரு சிங்களச் சகோதரரை வெட்டித் துண்டு துண்டாக்கி மீன் பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால்த்தான் பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர்தான் அந்தச் செய்தி பொய் என்று தெரியவந்தது. ஆனால் அழிவு அழிவுதான். கடைசி நேரத்தில் என்னைப் பேச அழைத்ததால் அது பற்றிய முழு விபரங்களையும் என்னால்த் திரட்ட முடியவில்லை. தார்சி விதாச்சி என்பவரின் ; ‘Emergency 58’  “58ன் அவசரகாலம்” என்ற நூலில் இது பற்றிய விபரம் அடங்கியுள்ளது. ஆகவே பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தாது இருப்போமாக! முக்கியமாக தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்துக்காவது நான் அவர்களுக்கு பயன்பட்டுள்ளேன் என்பதில் எனக்குத் திருப்திதான்.
தேசிய விளையாட்டு நிகழ்வுகளும் தடகளப்போட்டிகளும் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு அந்தந்தப் பிரதேசங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்ற வகையில் இந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருப்பது எமக்கு பெருமை அளிக்கின்றது. எனினும். பல விளையாட்டுக்களை நடத்த எமக்கு வசதிகள் இல்லை. பிறமாகாணங்களிலத்தான் அவை நடாத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் தேசிய விளையாட்டு நடைபெறுகின்றது என்று கூறுவது எமக்குப் பெருமை தரும் அதே வேளையில் நீச்சல் போன்ற பல போட்டிகளை எம்மால் நடத்த முடியாதிருப்பதால் மனவேதளை அடைகின்றோம். வெகுவிரைவில் வடமாகாணத்திற்குள்ளேயே கிளிநொச்சியில் சகல போட்டிகளும் நடாத்தப்பட்டு தேசிய விளையாட்டு விழா மீண்டும் இங்கு நடைபெற எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி வழி சமைப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.
42 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிலர் சாதனையாளர்களாக மாற்றப்பட்டுள்ளீர்கள். பலர் போட்டிகளில் வெற்றியீட்டி பதக்கங்களையும் பத்திரங்களையும் பெற்று மகிழ்ச்சித் திழைப்பில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் அனைவரையும் வாழ்த்தி மேலும் மேலும் வெற்றிகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
இவ்வருட 42வது விளையாட்டு நிகழ்வுகளில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கையில் தேசிய மட்ட சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எமக்கு பெருமைகளைத் தேடித் தந்துள்ளது. இவர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சிரே~;ட மெய்வல்லுனர் போட்டியொன்றில் கலந்து கொண்டு 3.35 மீற்றர் உயரத்தைத் தாண்டி சாதனை படைத்த போதும் இவரின் சாதனை சில மாதங்களுக்குள் இராணுவ வீராங்கனை கசிந்தா நிலுக்~pயினால் 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி முறியடிக்கப்பட்டது. எனினும் தொடர் பயிற்சியும் கடின உழைப்பும் இன்று அனித்தாவை 3.45 மீற்றருக்கு உயர்த்தி தேசிய மட்ட சாதனையை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள வைத்திருக்கின்றது.
மகாஜனாக் கல்லூரி என்பது போரின் பின்னர் புத்துயிர் பெற்ற ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட கல்லூரி. இங்கு எதுவித வளங்களும் கிடையாது. போரின் வடுக்களாக கட்டிட இடிபாடுகளும், சீமேந்து கற்களும், ஓட்டுத் துண்டுகளும் பரவிக் கிடக்கின்ற மைதானமே இவர்களின் மூலதனம். பயிற்சிக்கான உபகரணங்கள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் சீராக இல்லை. இந் நிலையிலும் அனித்தாவின் கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரை சாதனையாளராக மாற்றியிருக்கின்றது. இதே போன்று வடமாகாணத்தைச் சேர்ந்த பலர் வெற்றியாளர்களாகவும் அதில் சிலர் சாதனையாளர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகின்றேன். வெற்றியீட்டியவர்களின் பட்டியல் எமது கைக்கு நேரகாலத்துடன் கிடைக்கப்பெறாமையால் உங்களைத் தனித்தனியாக வாழ்த்த முடியவில்லை. எனினும் உங்கள் அனைவரையும் இத்தருணத்தில் மனமார வாழ்த்தி உங்கள் வாழ்வு வளமுள்ளதாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
விளையாட்டுக்கள் என்பது வெறுமனே போட்டிகளில் பங்கு பற்றுதலும் அதில் பரிசில்களையும் பதக்கங்களையும் வாங்குவதுடன் மட்டும் நிறைவடைந்து விடுவதல்ல. விளையாட்டுக்கள் ஒரு வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு அவர்களின் தொடர்பயிற்சிகள் மூலமாக ஆரோக்கியமான உடல்வலுவை வழங்கி மூளைக்கு புத்துணர்வை அளிக்கின்றது. பயிற்சிகளில் ஈடுபடுவதால் பலர் சிறு வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகளினால் பீடிக்கப்படுவதும் உண்டு. அவற்றைத் தாண்டிச் செல்லவும் மனவலு வேண்டும். எனினும் விளையாட்டு என்பது இளைஞர், யுவதிகளுக்கு மட்டுமானதொன்றாக இல்லாது எல்லா வயதினரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் விளையாட்டுக்களிலும் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவதன் மூலம் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் சுகதேகிகளாக வாழ வழிவகுக்கின்றது.
இன்று கிடைக்கப்பெற்ற அனைத்து வெற்றியும் உங்கள் கடின பயிற்சிக்கு கிடைத்த வெகுமதிகளே. தொடர் பயிற்சியும், உடல் உழைப்பும், முன்னேற வேண்டும் என்ற மன உறுதியும் இருந்தால்த்தான் வெற்றிபெறலாம்.
இன்றைய இந் நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. கிராமியச் சூழலில் பிறந்து கிராமிய சூழலில் வளர்ந்த இலங்கையின் தலைக் குடிமகன் என்ற வகையில் அவர் மக்கள் யாவரையும் மதிக்கின்ற ஒரு உயரிய பண்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றார். அதன் பிரதிபலிப்பாக அடிமட்ட நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொண்டு அவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றார். மக்களுக்குச் சகல விதங்களில் வலுவூட்டியும் வருகின்றார். எமது சாரணர்கள் தங்களுக்கு ஒரு கட்டிடம் அமைக்க வேண்டியுள்ளது என்று அண்மையில் கோரிய போது உடனே அதற்கான உதவியைப் பெற்றுக் கொடுக்க முன்வந்தார். அந்த வகையில் இன்று இங்கு வந்து இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி முன்னேறத் தூண்டுதல் அளித்து வரும் அவரின் வரவுக்கு உங்கள் சார்பாக அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது வேறுபட்ட மக்களை ஒன்று படுத்த விளையாட்டுக்கள் உதவி புரிகின்றன. மொழித் தடங்கல் எம்மைப் பிரிப்பதையும் நாம் காண்கின்றோம். சகோதர மொழியில் பாண்டித்தியம் பெறாததால் பல விடயங்களை நாம் மனம் விட்டு எமது சகோதர இனங்களுடன் பேச முடியாமல் இருக்கின்றது. நான் சிறுவனாக இருந்த போது ஆங்கிலமே மாணவ மொழியாகக் கல்லூரிகள் பலவற்றுள் திகழ்ந்தது. ஒரு வேளை முன்னணிப் பாடசாலைகளில் மட்டும் அந்நிலை நிலவியதோ என்றால் அப்படியும் இல்லை. பல தூரப்பிரதேச பள்ளிக் கூடங்களில் கூட ஆங்கிலம் தெரிந்திருந்தது.
1950களில் மகியங்கனைக்கு என் தந்தையாருடன் ஒரு முறை சென்ற போது அங்கிருந்த ஒரு ஆசிரியர் மிக அழகாக ஆங்கிலம் பேசியது இப்பொழுதும் என் நினைவில் இருக்கின்றது. ஆங்கிலத்தில் என் கல்வி யாவற்றையும் பெற்ற நான் தமிழ் மொழியைப் பயின்ற அதே வேளையில் 1955ம் ஆண்டு சிங்கள மொழியைப் படிக்க ஆவல் கொண்டு திரு.எல்லாவல என்ற எமது றோயல் கல்லூரி ஆசிரியரிடம் பயிலத் தொடங்கினேன். அரிவரிப் பாடம் எல்லாம் பயின்றதும் 1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் திரு.பண்டாரநாயக்கா அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஆகவே இனி நான் சிங்களம் படிக்க மாட்டேன் என்று இடை நிறுத்திவிட்டேன். வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரியத்தையும் மொழியையும் அரசாங்கம் புறக்கணித்தமை என்னைக் கோபம் அடையச் செய்தது.
ஆனால் இன்று மும்மொழித் தேர்ச்சி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அரசாங்கத்தால் வலியுறுத்தப் பட்டு வருகின்றது. விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றால் ஒருவருக் கொருவர் சரளமாகப் பேசுவது மட்டுமல்ல உலக அரங்கிலே நடைபெறும் விளையாட்டுக்கள் பற்றிய சகல விடயங்களையும் நாம் அறிந்து கொள்ள அது உதவும். புதிய யுக்திகள், புதிய வழிமுறைகள், புதிய பயிற்சிமுறைகள் போன்றவற்றை உடனேயே அறிந்து கொள்ள ஆங்கில அறிவு உதவி புரியும்.
அந்த வகையில் இன்று இங்கு வந்து இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி முன்னேறத் தூண்டுதல் அளித்துவரும் மாண்பு மிகு ஜனாதிபதியின் வரவுக்கு உங்கள் சார்பாக மீண்டும் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப் பகுதியில் விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்குகின்ற பல இளைஞர், யுவதிகள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தற்கால நவீன யுக்திகளைக் கையாண்டு விளையாட்டுத் துறைகளில் முன்னேறுவதற்குரிய உள்ளக விளையாட்டு அரங்குகள், விளையாட்டு உபகரணங்கள் என்பன இல்லாத காரணத்தினால் விளையாட்டுகளில் நவீன விளையாட்டு முறைமைகளையும் உரிய பயிற்சிகளையும் சரியான பயிற்சித் தளங்களில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். அத்துடன் கடந்த கால நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாக வீடுகளில் முடங்கிக் கிடந்து காலத்தை கழித்து வந்ததும் இவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விட்டது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் ஒரு நீச்சல் தடாகத்தை உள்ளடக்கிய உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைத்துக் கொடுப்பதன் மூலம் இவர்களை நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற உள்ளக நிகழ்வுகளில் மேலும் தேர்ச்சி பெற்று போட்டிகளில் அச்ச உணர்வுகள் இன்றி கலந்து கொள்ள வழிவகுக்கும். எனவே இந்த 42வது வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் பரிசிலாக வடபகுதி விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் தடாகம் உள்ளடங்கிய ஒரு உள்ளக விளையாட்டு மைதானமான கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தை விரைவில் அமைத்துத் தருவதற்காக வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். உபசபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால எமக்கு ஒரு கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைத்துத் தரப்போவதாக அறிவித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதியின் வரவு எமக்கெல்லாம் நல்வரவாக இருக்கட்டும் என்று கூறி என் தமிழ் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். அடுத்து ஓரிரு வார்த்தைகள் சிங்களத்தில் பேச விழைகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com