தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வி.மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்த பதிலிலேயே அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் துவங்கப்படும் என்று இலங்கை அரசின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
தென்னிந்தியா மற்றும் வடஇலங்கை இடையேயான உறவுகளை ஊக்குவிக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.
தென்னிந்தியாவிலிருந்து வட-இலங்கைக்கு விமானம் மூலம் பயணிப்போரின் சிரமங்களை போக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்த கப்பல் சேவைகள் துவங்கப்படும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அது மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்று இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐநா ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னதாக கருத்து குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, பொன் ராதாகிருஷ்ணன் இன்று இந்திய மாநிலங்களவையில் அளித்திருந்த பதிலில், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் கடலோர போக்குவரத்தை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதைப்போல இந்தியா-மியான்மருக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com