துலங்காத மர்மங்கள் – நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட சில காலம் ஆகும் என்கிறது பிரிட்டன் அரசு!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான சில ரகசிய ஆவணங்கள் பிரிட்டன் நாட்டு அரசின் ஆவணக்காப்பகத்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அவற்றை பகிரங்கமாக வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்க சற்று காலம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விடுதலைக்காக அகிம்சை வழியில் மகாத்மா காந்தி போராடிய நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மேற்குவங்காளத்தை சேர்ந்த இவர் எங்கு, எப்போது, எப்படி இறந்தார்? என்பது இதுவரை புரியாத புதிராக இருந்து வருகிறது. அவரது மரணம் பற்றி பலவித கருத்துகள் வெளியானது. ஆனாலும் எதுவும் உறுதியான தகவலாக இல்லை.

1945 ஆம் ஆண்டு தைவான் நாட்டில் விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அப்போது தைவானில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேதாஜி பற்றிய பல ஆவணங்கள் மேற்குவங்காள மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் கடந்த 70 ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில், அவர் தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததையடுத்து மேற்குவங்க அரசு, நேதாஜி பற்றிய 64 ரகசிய கோப்புகளை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டது. 12,744 பக்கங்களை கொண்ட அந்த கோப்புகள் கொல்கத்தா போலீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய சுதந்திரத்துக்காக மகத்தான பங்களிப்பு அளித்தும் போதுமான மரியாதை நேதாஜிக்கு அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எங்களை பின்பற்றி மத்திய அரசும் நேதாஜி குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு எந்தவொரு முடிவும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகின்றது. ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் பிரிட்டன் அரசுடனான ராஜாங்க ரீதியான உறவுகள் பாதிக்கப்படும் என முந்தையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கூறிய அதே பழைய பல்லவியை மோடி தலைமையிலான இந்த அரசும் கூறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவை முன்னர் ஆண்ட பிரிட்டன் நாட்டு அரசிடம் உள்ள நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேதாஜியின் கொள்ளுப்பேத்திகளில் ஒருவரான மாதுரி போஸ் பிரிட்டன் அரசை நாடியுள்ளார். நேதாஜி தொடர்பான ஆவணங்கள் பிரிட்டன் நாட்டு அரசின் ஆவணக்காப்பகத்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அவற்றை பகிரங்கமாக வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்க சற்று காலம் ஆகலாம் எனவும் மாதுரிக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசித்து வரும் மாதுரியின் சகோதரரான சூர்ய குமார் போஸ் தற்போது தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com