துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா – கொலைகளை மூடிமைக்கும் கூட்டு நாடகம்

VAIKO11இலங்கை கொலையை மூடி மறைப்பதற்கான திட்டமிட்ட நாடகமே எனக் குறிப்பிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரோமாபுரி பற்றி எரிந்தபோது மன்னன் நீரோ பிடில் வாசித்தான் எனப் பழிக்கப்படுகிறான்; அதுபோல ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்கின்றபோது மோடி விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்து விழா நடத்துகிறார். எருதுக்கு நோவு காக்கைக்குக் கொண்டாட்டம், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனியர் படுகொலையை, அண்மையில் ஜெர்மனி நாடாளுமன்றம் இனப்படுகொலை என அறிவித்து, அதற்கு நீதி வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை, இலங்கைத் தீவில் இந்திய அரசின் துரோக துணையுடன் சிங்கள அரசு கொன்று குவித்த கோரமான இனப்படுகொலையை முற்றாக மூடி மறைக்கவும், படுகொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தின் கவனத்திற்கே வராமல் தடுக்கவும், திட்டமிட்ட சதிவேலையை மிகத்திறமையாக சிங்கள அரசு செயல்படுத்துவதற்கு இந்திய அரசு பக்கபலமாக உதவுகிறது.

காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றிய எந்த விபரங்களும் வெளிவரவில்லை. சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்கள் விடுதலை ஆகவில்லை. சொந்த வீடுகளை இழந்து இராணுவம் காவல் புரியும் முகாம்களில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாடுகின்றனர். ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிங்களப் பேரினவாத வெறியர்களான புத்த பிட்சுகளின் ஏற்பாட்டில் தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் துரையப்பா விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. துயர இருளில் இருந்து வெளிச்சம் கிடைக்காதா என ஏங்கும் தமிழர்களின் பிள்ளைகளை அரங்கத்திற்குக் கொண்டு வந்து யோகா பயிற்சியைக் காட்டி காணொளி மூலம் அரங்கத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கை தட்டி மகிழ்கிறார்.

1,87,000 தமிழர்கள் படுகொலை நிரந்தரமாக வரலாற்றுப் புதைகுழியில் மறைப்பதற்கான முயற்சி இது.

தங்கள் தாயக மண்ணில் மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்காக அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் அறவழியிலும் பின்னர் உலகில் பல நாடுகள் மேற்கொண்ட ஆயுதப்போர் வழியிலும் போராடி வந்தனர். ஈழத் தமிழ் இனத்தின் தனித்தன்மையைச் சிதைத்து, மக்கள் தொகையைக் குறைத்து, காலப்போக்கில் ஈழத் தமிழ் இனத்தை நிரந்தர இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்குகின்ற திட்டத்தோடு இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் இன்றைக்கும் கொத்துக் கொத்தாக ஈழத்தமிழர்கள் அடைக்கலம் தேடிச் செல்லுகின்ற அவலம் தொடர்கிறது.

ரோமாபுரி பற்றி எரிந்தபோது மன்னன் நீரோ பிடில் வாசித்தான் எனப் பழிக்கப்படுகிறான்; அதுபோல ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்கின்றபோது மோடி விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்து விழா நடத்துகிறார். எருதுக்கு நோவு காக்கைக்குக் கொண்டாட்டம்,

உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் வளரும் பிள்ளைகளும் , தாய்த் தமிழகத்திலே வாழுகின்ற மான உணர்வு கொண்ட இளந்தமிழர்களும், சிங்கள, இந்திய அரசுகள் செய்கின்ற மாயமால வேலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

தமிழ் இனப்படுகொலை புரிந்தோரை அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவும், தமிழ் ஈழத் தாயகத்தில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு தமிழ் ஈழத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடத்திலும் நடத்துவதற்கு பாடுபட வேண்டுமென உறுதி மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com