துயிலுமில்ல நினைவுச் சமாதி கட்டுமானப்பணி பிரதேச சபை செயலரால் இடைநிறுத்தம் – பின்னணியில் கூட்டமைப்பு எம்.பியா?

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பி, தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனர்.

அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நினைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் கு. பிரபாகரன் (எழிலன்) தெரிவித்தார்.

கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்துவதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருப்பதாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டடிருந்த மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குற்றம்சாட்டியுள்ளர். குறித்த அரசியல்வாதி தனது தனிப்பட்ட சுகநலன்களை முன்னிறுத்தியே கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தியதாகவும் இதுவே அவர் முன்னிலையில் இவ் வேலையைத் தொடங்கியிருந்தால் பணி பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

மாவீரர் துயிலுமில்ல காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என 119 தொலைபேசிக்கு அழைப்பு கிடைத்ததையடுத்து தாம் இங்கு வருகை தந்ததாகவும், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com