துப்பாக்கி சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம்!- நீதிபதி இளஞ்செழியன்

 யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இன்று மாலை 5.10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெய்ப்பாதுகாவலர் இருவர் காயமடைந்தனர். ஆயினும் நீதிபதி இளஞ்செழியனுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

குறித்த சம்பவம் குறித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவிக்கையில்..

எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் துப்பாக்கி தாரியின் துப்பாக்கியை பிடித்து பறிக்க முயன்ற வேளை நான் துப்பாக்கியை விடுடா என கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடி அவனுக்கு அருகில் சுமார் எட்டடி தூரம் சென்ற போது , துப்பாக்கி தாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

அதில் துப்பாக்கி சூட்டுக்கு எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் இலக்காகி காயமடைந்தார். அதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பி சுட முயன்ற போது என்னுடைய மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஓடி வந்து என்னை காரினுள் தள்ளி ஏற்றினார்.

என்னை காரினுள் ஏற்றி விட்டு அவர் துப்பாக்கி தாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , ஆலய பின் பகுதியில் இருந்த வேலி தகரங்களை துளைத்து சென்றன.

துப்பாக்கி தாரி மீண்டும் என்னை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அப்போது பொலிஸ் காண்டபிளுக்கு தோள் பட்டையில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டது.

எனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் துப்பாக்கிதாரி மீது மூன்று நாலு சூட்டினை நடாத்தி இருந்தார். அதில் துப்பாக்கி தாரிக்கு காயம் ஏற்பட்டதா என்பதனை அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் நொண்டி நொண்டி ஓடினதை அவதானித்தேன்.

அதனை தொடர்ந்து காயத்திற்கு உள்ளன, எனது இரு மெய்பாதுகாவலர்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றேன்.

இது தொடர்பில் , பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் , தலைமையாக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவித்து குறித்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமராக்களை பரிசோதித்து துப்பாக்கி தாரியை கைது செய்யும் நடவடிக்கையை துரித கெதியில் முன்னெடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளேன்.

இந்த சம்பவம் ஆனது நான் வழமையாக கோவில் வீதியால் தான் சென்று வருவேன். அதனை அவதானித்து என்னை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதா எனும் சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. எனில் அண்மைக்காலமாக யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறும் பார தூரமான வழக்குகளை கையாளும் நபராக இருப்பதனால் , இந்த துப்பாக்கி சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில் அந்த துப்பாக்கியை அவர் கையாண்ட விதம் ஒரு அனுபவம் உள்ள நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் பார்த்த போதும் அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கி சூட்டாளர் போன்றே தோன்றியது.

வீதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் எனது மெய் பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி தாரிக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆனது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான் அத்துடன் எனது மெய் பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது.

ஆகவே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு , நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com