துன்னாலையில் தொடரும் கைதுகள்! முதலமைச்சரிடம் முறையீடு !!

வடமராட்சி துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்துமாறு துன்னாலை பிரதேச மக்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துன்னாலை பிரதேச மக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் 6ஆம் கட்டைப் பகுதியில் வைத்து கடந்த 9 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மந்திகை வைத்தியசாலையில் வைத்து பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜுப் வண்டி மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அத்துடன் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த பொருட்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துன்னாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துன்னாலை மக்கள் வடமாகாண முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் துன்னாலை மக்கள் பிரதிநிதிகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடன் தாம் கலந்துரையாடி, தீர்வை பெற்றுத்தருவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com