தில்ருக்‌ஷியுடன் ஜனாதிபதி பேசிய துபாய் கணக்கு விவகாரம் ஒரு மாணித்தியாலத்துள் மகிந்தவிற்கு தெரிந்தது எப்படி ? – ராஜித

rajithaதுபாய் வங்கி ஒன்றில் இருந்த கணக்குகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது பற்றி பேச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒருநாள் சந்திக்க வந்ததாகவும், அவர் வந்து சென்று ஒரு மணி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து ஜானதிபதிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், குறித்த துபாய் கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த நாட்டிடம் கோருவதற்கான கடிதத்தை எடுத்துக் கொண்டு தேவையான கையெழுத்தைப் பெறவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், அங்கிருந்து சென்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் துபாய் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தன்னிடம் வினவியதாக மைத்திரிபால சிறிசேன கூறினார் என ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து பிரச்சினை எழுவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியதோடு, ஜனாதிபதியால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்தும் ஊடகங்களால் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைப் தளபதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டமை குறித்து, ஜனாதிபதியால் கூறப்பட்ட கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, அரசாங்க ஊடகங்கள் கூட அவற்றை சரியாக அறிக்கையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் துபாய் கணக்குகளில் இருந்து 500 மில்லியன் டொலர் வரை இரு முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாவும், தற்போது அந்தக் கணக்கில் பணம் இல்லை எனவும் இது தொடர்பான விசாரணைகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com