திருவிளச் சீட்டில் நானாட்டான் பிரதேச சபையைக் கைப்பற்றியது தமிழ்க் கூட்டமைப்பு

நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுளச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது. நானாட்டான் பிரதேச சபைக்கான 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பிற்கு ஆதரவளித்தமையினால் இரகசிய வாக்களிப்பு இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.

இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுலச் சீட்டின் மூலம் தலைவர் தெரிவு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் தெரிவு இடம் பெற்றது. -இதன் போது உப தலைவர் தெரிவிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.

இதன் போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தலைவர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம் பெற்றது. குறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.

இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் உப தலைவர் தலைவர் தெரிவு இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை திருவுலச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், மாகாண சபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிறாய்வா, அலிக்கான சரீப், எம்.கே.சிவாஜிலிங்கம், மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் பிரதேச பபையின் தலைவர் எஸ்.எச்.முஜாஹிர் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com