தியாகங்களை மதித்து சுமந்திரன் தனது அரசியல் பாதையை மாற்றவேண்டும் – இன்றேல் அவருக்கு எதிரான உணர்வலை நிலைத்திருக்கும்

விடுதலைப் புலிகள்முன்வைத்த ஈழக் கோரிக்கையை ஏற்றுத்தான் முள்ளிவாய்க்கால்வரை மக்கள் புலிகளின் பின்னால் அணிவகுத்தார்கள் அப்பேற்பட்ட சூழ்நிலையை அறிந்து சுமந்திரன் தனது அரசியல் பாதையை மாற்றியமைக்கவேண்டும் சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள்அனைவரது எதிர்ப்பையும் போராளிகளது எதிர்ப்பையும் சம்பாதித்துவிட்டார் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தரும் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா சுமந்திரன் என்ன காரணத்திற்காக தனக்கு அச்சுறுத்தல் என முன்னாள் புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளாரோ தெரியாது ஆனால் சுமந்திரனுக்கு எதிரான இந்த உணர்வலையானது சுமந்திரனில் அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படும்வரை நிலைத்திருக்கும். இதை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு இரண்டுவருடகால கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை ஆதரிப்பதாக கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தராகவும் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவிற்கு எதிர்புத் தெரிவித்து அதனை பதிவு செய்யவென திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இரண்டு வருட கால அவகாசத்தை கொடுப்பதை ஆதரிக்கவேண்டுமா என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை சிந்தித்து அதில் முடிவெடுக்கவேண்டும். சிங்கள அரசுகள் எந்த உறுதிமொழிகளைத் தந்தாலும் அது எம்மை ஏமாற்றுகின்ற முயற்சியே. எந்த ஒரு சிங்கள ஆட்சியாளரும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முனவரவில்லை. கையில் பாரம் கொடுத்தவர்கயே இவர்களால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியவில்லை. ஒரு ரெஜிமென்டில் கட்டாயம் றெக்கோட் இருந்திருக்கும். பாரம் எடுத்தவர் யார்? அவர் அவரகளை எங்கே கொண்டுசென்று கொடுத்தார் என்ற விபரங்கள் இருக்கும். ஆனால் பிரதமர் சொல்கின்றார் அவர்கள் வெளிநாடு சென்றுவிட்டதாக. இவையாவும் பொறுப்பற்ற செயல்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளிற்கு எமக்கு நியாயம் வேண்டும். எமது கண்முன்னாலேயே கொல்லப்பட்டர்களின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றால் எமக்கு நியாம் கிடைக்க வேண்டும். எமக்கு நியாயம் பெற்றுத்தருவார்கள் என்றுதான் நல்லாட்சி அரசை ஆதரித்தோம். ஆனால் அனைத்து எதிர்பார்ப்புமே இன்று எமக்கு ஏமாற்றமாகிவிட்டது. அதன் தொடர்ச்சிதான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று எடுத்திருக்கும் இரண்டு வருட கால அசகாசம் கொடுப்பதை ஆதரிக்கும் முடிவு. அதனை மீள் பரிசீலனை செய்து இராஜதந்திரமாக எமது பிரச்சினைகளை வெற்றிகொள்ள சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்.

சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள்அனைவரது எதிர்ப்பையும் போராளிகளது எதிர்ப்பையும் சம்பாதித்துவிட்டார். அது அவரைப் பொறுத்த விடையம். ஆனால் அவர் தனது அரசியல் பாதையில் ஏற்படுத்திக் கொண்ட மாபெரும் தவறு என்றுதான் இதைக் கூறவேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை மௌனித்திருந்தவேளையிலும் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டோ அவர்கள் முற்றாக இல்லாமல் போய்விட்டார்கள் என்றோ எண்ணுவது மடமைத்தனமானது. வடக்கு கிழக்கு ஈழதேச மக்கள் அனைவருமே விடுதலைப் புலிகளை அணிவகுத்துத்தான் முள்ளிவாய்க்கால்வரை சென்றிருக்கிறார்கள் என்றால் புலிகள் எமது மக்களின் விரும்புங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.

அப்பேற்பட்ட சூழ்நிலையை அறிந்து சுமந்திரன் தனது அரசியல் பாதையை மாற்றியமைக்கவேண்டும். விடுதலைப் புலிகளால் சுமந்திரன் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தகவல் வந்த மறுநாளே அப்படித் தங்களிடம் தகவல் ஏதும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
ஆனால் சுமந்திரனின் உறவினரான டி.பி.எஸ். ஜெயராஜ் தேவையில்லாமல் பல இடங்களில் கதைத்துள்ளார். இதே டி.பி.எஜ் ஜெயராஜ் தான் கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தில் தனது ஆரம்பகால வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். என்ன காரணம் என்றே தெரியாது சுமந்திரனால் குற்றஞ்சாட்டப்பட்டு அப்பாவிப் பெடிய ளை உள்ளிற்கு கொண்டு சென்றார்களோ தெரியாது.
ஆனால் சுமந்திரனுக்கு எதிரான இந்த உணர்வலையானது சுமந்திரனில் அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படும்வரை நிலைத்திருக்கும். இதை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தவொரு போராட்ட இயக்கங்களும் அழிந்துபோனதாக வரலாறு கிடையாது. தமிழீழத்திற்காக தமது தாய்தந்தையரின் விரும்பங்களை எதிர்த்து, வெறுத்து தனித்துவமான முடிவெடுத்து சென்றவர்கள் எமது இளைஞர்கள். அவர்கள் அவர்கள் ஆகுதியாகிவிட்டார்கள். அவர்களுடைய இழப்பு எங்களிற்கு இன்றும் ரணமாகிக்கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் அதனை மறந்துவிடவில்லை. எந்த ஒரு நாட்டிலும் எந்வொரு விடுதலைப் போராட்டங்களும் அழிந்துபோனதாக வரலாறு கிடையாது. அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருப்பதாகத்தான் விடுதலைப்புலிகள் கூறியிருக்கின்றார்கள். நாம் எமது மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்காக இரத்தம் சிந்தாத அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துவருக்கின்றோம். அந்த மறவர்களின் எதிர்பார்ப்புக்களை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான கடமைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com