தாயகம் திரும்பும் 43 இலங்கை அகதிகள்

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 43 இலங்கை அகதிகள் இன்று (09) விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.
திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 4589 இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்ப விரும்புபவர்கள் குறித்த பட்டியல்களை வழங்கினால் அதற்கு உதவிசெய்ய முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எஸ்.சி.சந்திரஹாசன் தலைமையில் தமிழகத்தில் செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. வான் மார்க்கமாகவன்றி கடல்மார்க்கமாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தால் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளில் பலர் நாடு திரும்புவார்கள் என்ற விடயத்தை சந்திரஹாசன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com