சற்று முன்
Home / செய்திகள் / தலைமறைவாகியிருந்த குற்றவாளிக்கு 5 வருட கடூழியச் சிறை நிறைவேற்றம்

தலைமறைவாகியிருந்த குற்றவாளிக்கு 5 வருட கடூழியச் சிறை நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு இன்று தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று குற்றவாளிக்கான தீர்ப்பை வாசித்து தண்டனைத் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
சாவகச்சேரியில் 2007ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளின் நிறைவில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.
இரண்டாவது எதிரியான சாவகச்சேரி, கச்சாயைச் சேர்ந்த கனகரத்தினம் கமலதாஸ் அல்லது குட்டி தலைமறைவாகியதால் அவரைக் கைது செய்ய பொலிஸாருக்கு மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.
இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரி கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். குற்றவாளி இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குற்றவாளி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வாசித்தார். குற்றவாளிக்கான 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை,இந்த வழக்கில் சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட சிவகவி சிவபாலன், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆட்சேபித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com