தமிழ் மக்கள் மேற்கொண்ட வன்முறை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதனாலேயே சர்வதேசத்தின் ஆதரவு அதிகரித்துள்ளது.

(பதிவு செய்த நாள் – ஐப்பசி 02, 2015, 11.08 பி.ப) தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்த வன்முறையுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு அகிம்சையின் அடிப்படையில் தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதன் காரணமாகவே சர்வதேசத்தின் ஆதரவு இப்போது அதிகளவில் கிட்டியிருக்கின்றது என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தந்தை செல்வாவின் வழிவந்த தமிழர்கள் ஏன் வன்முறை வழியைப் பின்பற்றினார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் தமிழ் மக்களை கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் யாழ். இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற (02) காந்திஜெயந்திiய முன்னிட்டு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடைபெற்ற சர்வதேச அகிம்சை தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் காந்திய வழியைப் பின்பற்றியே எமது பயணத்தைத் தொடர்ந்தோம். 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு எமது அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தபோது இலங்கை அரசு அதனை ஒடுக்கும் வகையில் செயற்பட முனைந்தது. அப்போது எங்கள் இளைஞர்கள் வன்முறைநோக்கி நகர எத்தணித்தபோது நாங்கள் அது தவறானது என உணர்த்தி அவ்வழியை கைவிடச் செய்தோம்.
ஆனால், இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தெரிவித்த அவர் வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறை முடிவுக்கு வந்து, அகிம்சையின் அடிப்படையில் தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதன் காரணமாகவே சர்வதேசத்தின் ஆதரவு அதிகளவில் இப்போது கிட்டியிருக்கின்றது என்றும் சம்பந்தன் இங்கு தெரிவித்துள்ளார்.
உலகில் செல்வாக்கு மிக்க, அண்டை நாடான இந்தியாவின் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com