தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் 1983 இல் இருந்து விசாரணை செய்யப்படவேண்டும் – ஈ.பி.டி.பி

Duckles Epdpஇலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த படுகொலைகள் மற்றும் ஆட்கள் காணாமல் போனமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை செயற்பாடுகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியான ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணியிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஈ.பி. டி பிக்கும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பாக பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த  ஈ. பி. டி. பி தலைவரான டக்ளஸ் தேவானந்தா, “1983 ஆம் ஆண்டு தொடக்கம் விசாரணை என்பது சாத்தியப்படாத பட்சத்தில் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தாவது ஆரம்பிக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் ”என்றார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் காரணமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சகல தரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, குறிப்பாக நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் பற்றி தங்களால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்புடன் விடுதலை கிடைக்க வேண்டும்.
பாதுகாப்பு தரப்பு வசமுள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக மீள கையளிக்கப்பட வேண்டும் .
தமிழர் பிரதேசங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யுத்த வெற்றி அடையாளங்கள் அகற்றப்பட்டு மக்கள் மனங்களில் யுத்த வடுக்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்களையும் டக்ளஸ் தேவானந்தா இந்த சந்திப்பின்போது முன் வைத்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com