சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைமையை துறக்கிறார் விக்னேஸ்வரன்…

தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைமையை துறக்கிறார் விக்னேஸ்வரன்…

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்திற்கு விக்னேஸ்வரன் வந்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவர் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. வலம்புரி பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்ட ஒரு பகுதியினர், விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.

நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அவர் இணைத்தலைமை பதவியை துறக்கும் முடிவிற்கு வந்து விட்டார் என்பது நம்பகரமாக அறிய முடிந்தது.

இது குறித்த ஆலோசனையை தமிழ் மக்கள் பேரவைக்குள் நடத்தினார். எழுக தமிழ் நிகழ்வின் பின்னர் இணைத்தலைமையை துறக்கும்படி பேரவைக்குள் கணிசமானவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, எழுக தமிழின் பின்னர் இணைத்தலைமையை துறப்பது, வெளி அழுத்தங்களின் பின்னர் விக்னேஸ்வரன் விலகுவதாக கருதப்பட்டு விடும், அதனால் உடனடியாக பதவியை துறவுங்கள் என இன்னும் சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டது.

நீண்ட ஆலோசனையின் பின்னர், எழுக தமிழ் நிகழ்வு முடிந்ததும் உடனடியாகவே இணைத்தலைமைய துறக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையை- அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக- கூட்ட வேண்டுமென பல்கலைகழக மாணவர் ஒன்றியம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. அதில் கலந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மாணவர் பேரவை அழுத்தம் கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட முன்னணி, பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதாக வாக்களித்திருந்தது.

கடந்த சில தினங்களின் முன்னர் வரை, பேரவை கூட்டத்தை கூட்ட இரண்டுமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது வெற்றியளிக்கவில்லை. எழுக தமிழ் பேரணி முடிந்ததன் பின்னர் அடுத்தடுத்த நாட்களிலேயே தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இணைத்தலைமையை துறக்கும் அறிவித்தலை விக்னேஸ்வரன் விடுப்பார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com