தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி! -கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி, உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்து உள்ளதென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் நேற்று (12) நடைபெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“பேரவையின் பங்களிப்புடன், பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளோடு, சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கி, புதிய கூட்டணி உருவாகவுள்ளது.

“நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், அப்புதிய கூட்டணி போட்டியிடும். அது தொடர்பில் மக்கள் பேரவை, உத்தியோகபூர்வ முடிவை, இன்னும் ஓரிரு நாட்களில் எடுத்து, உத்தியோகபூர்வ அறிக்கை ஊடாக அதனை வெளிப்படுத்தும்” என மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல் .எப் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், புதிய கூட்டணியொன்றுக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தவே, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயல்கிறது.

ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவராக உள்ள, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலுக்குள் முடங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் காணப்படுகிறார். நேற்று அவர் ஆற்றிய உரையிலும், அதே மாதிரியான கருத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.

“கட்சி அரசியல் வேறு அரசியல் ஈடுபாடு வேறு. தமிழ் மக்கள் பேரவை, அரசியல் ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டது. மக்கள் இயக்கம் என்று கூறும் போது, தமிழ்ப் பேசும் சகல மக்களையும் வேற்றுமை பாராது, பிரதேசங்கள் பாராது, மாகாணங்கள் பாராது, ஏன் நாடுகள் கூடப் பாராது, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிந்தனையை மேற்கொண்டு, எமது அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

“கட்சி அரசியல் எனும் போது, குறுகிய ஒரு வட்டத்தினுள், கட்சியின் நலன் கருதி உரிய நடவடிக்கைகளை – முக்கியமாகத் தேர்தலின் போது – எடுப்பதையே அது குறிக்கும். நாம், கட்சி அரசியலுக்கு எதிரானவர்கள் அல்லர். எம் மத்தியில்கூட, ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் மிக முக்கிய உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் கட்சியின் வலையமைப்பு, எமது கூட்டங்களைக் கூட்டுவதில் மிக முக்கிய பாகங்களை வகித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.

“ஆனால் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் நடவடிக்கைகளும், குறுகிய வட்டத்தினுள் அடங்குவன என்பதைத்தான் நான் இங்கு கூறவருகின்றேன். தமிழ் மக்களின் விடிவுகாலத்தை எதிர்நோக்கிச் செல்லும் போது, கட்சிகளாவன தற்காலிகமாகவேனும் கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு, நேரடியான மறுப்பை அவர் வெளியிடாத போதிலும், கட்சிகளுக்குள் காணப்படும் முரண்பாடுகளைத் தாண்டிச் செயற்பட வேண்டுமென்பது, அவரது எதிர்பார்ப்பாகும். எனவே, அடுத்த கட்டமாக என்ன நடக்கப் போகிறது என்பது, அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com