சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ? – சம்பந்தன், கஜேந்திரகுமாருடன் பேரவை பேச்சு

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ? – சம்பந்தன், கஜேந்திரகுமாருடன் பேரவை பேச்சு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்பட்ட சுயாதீனக் குழு இன்று (02) கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் தனித்தனியாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. இக் குழு நாளை யாழ்ப்பாணத்தில் வைத்து சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தனுடனான சந்திப்புக்களின்போது எப்போதும் உடனிருக்கும் சுமந்திரன் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. குறித்த கலந்துரையாடலில் சம்பந்தன் மட்டுமே தனியாகப் பங்கேற்றிருந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியியுடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சட்டத்தரணிகளான காண்டீபன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமாருடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரிவிக்க மறுத்துவிட்ட குறித்த குழுவினர் நாளை விக்கினேஸ்வரனுடனான சந்திப்பின் பின்னர் அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டனர்.

எனினும் பொதுவான தீர்மானம் ஒன்றை முன்வைத்து தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்குடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டுத் தீர்மானத்துடன் பொது வேட்டாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலேயே குறித்த சந்திப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் குழு நடாத்தியதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை இச் சந்திப்புக்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கை வருமாறு,

ஊடக அறிக்கை 02.10.2019 – தமிழ் மக்கள் பேரவை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

மேற்படி சுயாதீன குழுவில்
சுவாமி சிதாகாசானந்தா (சின்மயா மிஷன், யாழ்ப்பாணம்)
அதிமேதகு பொன்னையா ஆண்டகை (ஆயர் திருகோணமலை மறை மாவட்டம்)
தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார்
அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் (குருமுதல்வர் யாழ். மறை மாவட்டம்)
சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம் (சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்)
பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (தலைவர், அரசறிவியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்)
கலாநிதி கு.குருபரன் (தலைவர், சட்டத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
திருமதி. கோசலை மதன் (விரிவுரையாளர், சட்டத்துறை யாழ். பல்கலைக்கழகம்)
திரு. நிலாந்தன் (அரசியல் ஆய்வாளர்)
திரு. குருநாதன் (சமூக செயற்பாட்டாளர், மட்டக்களப்பு)
திரு. கஜன் ( சமூக செயற்பாட்டாளர், திருகோணமலை)
வைத்திய கலாநிதி சிவபாலன் (மருத்துவர், யாழ். போதனா வைத்தியசாலை)
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள் இன்று (02.10.2019) மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இன்று (02.10.2019) மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேற்படி இரண்டு சந்திப்புக்களிலும் சுயாதீனக் குழுவின் சார்பில் யாழ் சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிமேதகு பொன்னையா ஆண்டகை, தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார், சட்டத்தரணியும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக செயற்பாட்டாளர் கஜன், வைத்திய கலாநிதி சிவபாலன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த இரண்டு சந்திப்புக்களும் சுமுகமாக இடம் பெற்றன. இதேவேளை நாளை (03.10.2019) நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினருடனான சந்திப்பு இடம்பெறும். தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவானது சுயாதீனமாக இயங்கும் என்பதுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகள், புலமைசார் வல்லுனர்களை குழுவில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சுயாதீனக் குழு மேற்கொள்ளும்.

ஊடகப் பிரிவு
தமிழ்மக்கள் பேரவை
02.10.2019

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com