தமிழ் மக்களின் சமத்துவ வாழ்வு பற்றிய தமிழினியின் கனவு நிறைவேற உழைப்போம் – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் மக்களின் சமத்துவ வாழ்வு பற்றிய அவர் கனவு நிறைவேற உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி எனக் குறிப்பிடுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் விவகாரத் குழுத் தலைவியுமான பத்மினி சிதம்பரநாதன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் பெண்களின் விடிவிற்கு உழைத்த தமிழினி மௌனித்து விட்டார். பெண்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் வாழ்வு இருளில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டு வேதனையுற்று அவர்களின் சுயத்தைக் கட்டியெழுப்பி வலுவுள்ளவர்களாக மாற்ற விரும்பினார். மிகுந்த ஆளுமை நிறைந்த வாசிப்புப் பழக்கம் கொண்ட கம்பீரமான பெண் தமிழினி. பெண்கள் குழந்தைகளுக்கான புதிய உலகைப் படைக்க விரும்பினார் ஆனால் இன்று அவரது மௌனிப்பு பெரும் அதிர்ச்சியில் எம்மை உறையவைத்துவிட்டது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழினியை ஒரு அரசியல் செயற்பாட்டாளராக மக்கள் கண்டனர் அந்தத் தேவையும் பெண்கள் மத்தியில் வேண்டப்பட்டது. தமிழினியின் மேடைப் பேச்சுக்களின் செயற்பாடுகளில் அவரின் ஆளுமை தென்பட்டது. யுத்த நிறுத்த காலப் பேச்சுவார்;த்தைகளின் போது பெண்களுக்கான உபகுழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அதில் அரசாஙகத் தரப்பு சார்ந்து பல சிங்களப் பெண் புத்திஜீவிகள் கலந்துகொண்டனர். தமிழ்த் தரப்பில் பெண்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராய் தமிழினி தலைமையில் போராளிப் பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கு நேர்வையைச் சேர்ந்த புலமையாளர் அஸ்ரிக் அம்மையார் அணுசரணையாளராக விளங்கினார் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழினியின் ஆளுமையைக் கண்டு அரச தரப்பு புத்திஜீவிகள் வியந்தனர்.

இதன்போது பெண்கள் விவகாரங்களுக்கான செயலகம் அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தை இளுபறி ஏற்பட்டது. அது கொழும்பில் அமைக்கப்படவேண்டும் என்பதே அரச தரப்பினரின் கருத்தாக இருந்தது. இந்த இடத்தில் தமிழினி பல நியாயங்களை முன்வைத்து அது வன்னியில் அமைக்கப்படவேண்டும் என வாதாடினார் இறுதியில் பேச்சுவார்த்தை முடியும் நேரம் அரச தரப்பினரை ஏற்றிச் செல்வதற்காக அனுராதபுரத்தில் இருந்து உலங்கு வானூர்தியும் கிளம்பிவிட்டது இந்த இடத்திலே தமிழினியின் ஆளுமையின் உச்சம் வெளிப்பட்டது அவரது மறுக்கமுடியாத நியாயங்களால் சம அந்தஸ்து கொண்ட இரு செயலகங்களை கொழும்பிலும் வன்னியிலும் அமைப்பது என்ற முடிவு எட்டப்பட்டது. தமிழ் மக்களின் சமத்துவ வாழ்வு பற்றி அவர் கனவு நிறைவேற உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி. அவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அவருக்கு கௌரவம் அளிக்கப்படவேண்டும் என அனைவரையும் வேண்டிக்கொள்கின்றேன்.
என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com