தமிழ் நாட்டின் ‘ஒரே பச்சைத்தமிழன்’ ரஜினி அவர்களுக்கு..!

ஒருவர் தேர்தல் அரசியலுக்கு வருவதும் வராமலிருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், ஜெயாவின் மரணம்.. கருணாவின் மவுனம் என சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்ததுபோல் தற்போது அரசியலில் குதிப்பதற்கான முழு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்காக திடீர் ஞானோதயம் வந்ததுபோல் ரசிகர்களுடன் படம் எடுக்காவிட்டால் அவர்கள் சோறு தண்ணீர் இல்லாமல் செத்துப்போய்விடுவார்கள் என்பதால் ரசிகர்களை சந்தித்துப்படம் எடுத்து வருகிறார்.

படம் எடுக்கிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. அரசியலுக்கு வருகிறார்… கழுதை என்னமும் செஞ்சுட்டுப்போகட்டும். ஆனால் ரசிகர்களிடம் தன்னை பச்சைத்தமிழன் என்று கூறியிருக்கிறார். அதுதான் இங்கு பிரச்னை.

அவரது பச்சைத்தமிழன் வசனத்தைப் பார்த்ததும், “ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்ககாசு கொடுத்த ஏமாளி தமிழர்களின் காதுகளில் ஒரு கூடை பூக்களை சொருகப்பார்க்கிறாரே..” என்றுதான் தோன்றியது.

வெறும் 44 ஆண்டுகள் தமிழகத்தில் இருப்பதால் அவர் பச்சைத்தமிழன் என்று கூறியதற்கு மூன்று தலைமுறைகளாக மும்பையில் வசித்தவன் என்ற தகுதியின் அடிப்படையில் சில விசயங்களை அவருக்கு புரிய வைக்க வேண்டியிருக்கிறது.

மூன்று தலைமுறை மட்டுமல்ல.. முன்னூறு தலைமுறையாக மும்பையில் இருந்தாலும் சரி நாங்கள் தமிழர்களாகதான் இருப்போம். மராட்டியராகிவிட முடியாது.

அதாவது நாங்கள் மகாராஷ்டிரத்தில் வாழ்பவர்களாக இருக்க முடியுமே தவிர.. மராட்டியராக முடியாது.

ஏனெனில் என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். மும்பையில் அடிவாங்கினாலும் சரி.. அதிகாரத்திற்கு வந்தாலும் சரி.. நாங்கள் தமிழர்கள் என்ற எங்கள் இன அடையாளத்துடன் தான் இருக்கிறோம். உலகம் முழுக்க தமிழர்கள் இப்படிதான் இருக்கிறார்கள்.

பிழைக்க சென்ற எந்த மண்ணின் பூர்வீக குடிகளின் இன அடையாளத்தையும் மொழி அடையாளத்தையும் தமிழர்கள் சிதைத்ததில்லை.

ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்களை தங்கள் அரசியல் நலனுக்காக திராவிடராகவும்.. தமிழ் மொழியை அழிக்கும் வேலையையும் எவ்வளவு எளிதாக செய்ய முடிகிறது.. அதுவும் வெறும் 44 ஆண்டுகள் வாழ்ந்ததாலே ஒருவர் தமிழர் ஆகிவிடுவது எவ்வளவு பெரிய மெடிக்கல் மிராக்கிள்.

இதே அளவுகோளில் உங்களின் உற்ற நண்பர் பால்தாக்ரேவின் வாரிசுகளிடம் சொல்லி என்னை மராட்டியராக கன்வர்ட் செய்ய சொல்ல முடியுமா ரஜினி சார்..

முடியாது இல்லையா..

அதுபோல்தான்.. நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க முடியுமே தவிர தமிழராக ஆக முடியாது.

அதே சமயம் திராவிட திரிபுவாதிகள் போல் தமிழர்களை திராவிடர்களாக மாற்றும் அரசியலை செய்யாமல் உங்களை தமிழனாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியதை பாராட்டுகிறேன். ஆனால் ஒரு இனத்துக்கு மாறுவது அத்தனை எளிதன்று.

இந்த விசயத்தில்.. “ஆமா.. நான் கன்னட பாப்பாத்திதான் என்று துணிச்சலாக தன் இன அடையாளத்தைச் சொன்ன ஜெயாவை பாராட்டுவேன். கருணாநிதி உள்ளிட்ட திராவிடம் பேசும் ஓட்டரசியல்வாதிகளுக்கு இந்த யோக்கியதை கிடையாது.

எம்.ஜி.ஆர். மலையாளி என்று தெரிந்தே அதிகாரத்தில் வைத்ததுபோல் ஜெயா கன்னடர் என்று தெரிந்தேதான் அவரையும் அதிகாரத்தில் வைத்தார்கள் தமிழர்கள்.

ஆகையால் இந்த பச்சைத்தமிழன் சிவப்பு தமிழன் கருப்பு தமிழன் என்றெல்லாம் ஃபிலீம் காட்டாமல் நீங்கள் கன்னடரோ மராட்டியரோ உங்கள் இன அடையாளத்துடனே தமிழர்களிடம் வாருங்கள்..

ஏனெனில் நீங்கள் யார் எந்த மொழி என்று பார்க்காமல்தான் உங்களது ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு கொடுத்தான் தமிழன்.

அதே தமிழன் நீங்கள் சரியானவர் என்று நம்பினால் அதிகாரத்தையும் கொடுப்பான்.

எனவே கேமரா முன் மட்டுமே நடியுங்கள்..
தமிழர்களிடம் அல்ல..!

நன்றி – கார்ட்டூனிஸ்ட் பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com