தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் – துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அதிபர் எஸ்.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்,

தமிழர்களின் அரசியல் என்பது வெறும் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு செல்லும் அரசியல் அல்ல. இந்தநாடு சுதந்திரம் கிடைத்தநாள் தொடக்கம் பறிக்கப்பட்டுவருகின்ற சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தினை வென்றெடுப்பதற்கான அரசியலாகும்.

இந்த அரசியலில் நாங்கள் பல்வேறு கட்டங்களை தாண்டியிருக்கின்றோம்.இன்று ஒரு நிலையில் இருக்கின்றோம்.இந்த நிலைமைகள் அனைத்தையும் பார்க்கும்போது நான் நெஞ்சு வெதும்பியவனாக உரையாற்றுகின்றேன்.

நாங்கள் வளர்த்திட்ட சுதந்திரத்தை தேடும் எண்ணமானது வெறும் தண்ணீர்விட்டு வளர்க்கப்பட்டது அல்ல,கண்ணீரும் செந்நீரும் வார்த்து வளர்க்கப்பட்டது.

இன்று இந்த விடயம் பாராளுமன்ற அரசியலமைப்பு சபையிலும் சர்வதேச விவகாரங்களை கையாளும் மனித உரிமைகள் ஆணையத்திலும் பேசப்படும் விடயமாகவுள்ளது.

தற்போது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சர்வதேச நாடுகளின் விவகாரங்களை ஆராய்ந்துகொண்டுள்ளது.அந்தவகையில் இலங்கை தொடர்பான விபரங்களும் ஆராயப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணையத்தின் அங்கத்துவ நாடுகளும் இணைந்து இலங்கையில் நடைபெற்ற போக்குற்றம் தொடர்பில் விசாரணை நடாத்திடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

2015ஆம்ஆண்டு இலங்கை அரசாங்கமும் இணைந்து அதனை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டுள்ளது.தற்போது ஏற்கனவே பெறப்பட்ட கால அவகாசம் போதாது என்ற வகையில் காலநீடிப்பு தொடர்பான சில அணுகுமுறைகளை கையாண்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடப்பாடு என்ன என்று நாங்கள் பார்க்கவேண்டும். இலங்கை அரசாங்கம் செய்யவேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள கடமைகள் நிறைவேற்றப்படவேண்டுமா இல்லையா என்பதே இன்று கேள்வியாகவுள்ளது.

அது நிறைவேற்றப்படவேண்டுமானால் இதுவரையில் சில பகுதிகளையே நிறைவேற்றியுள்ளோம் இன்னும் நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் அரசாங்கம் கேட்கும்போது அதன் கடமையினை நிறைவேற்ற தேவையானவற்றை செய்விப்பதா அல்லது அவர்களை விட்டுவிட்டு தேவையினை நிறைவேற்றாமல் விடுவதா இன்றைய கேள்வியாகவுள்ளது.

இந்தநிலையில் அவற்றினை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்குடனேயே கால அவகாசம் வழங்கவேண்டிய ஒரு சூழ்நிலையேற்பட்டால் கடுமையான நிபந்தனைகளுடன் கூடியதாக தீர்மானம் அமைந்திடவேண்டும்.அவ்வாறான நிலைலேயே போர்க்குற்றம் தொடர்பிலான பலாபலன்கள் மக்களுக்கு வந்துசேரும்.

இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு கால அவகாசம் தேவையில்லையென ஒரு விண்ணப்பத்தினை அனுப்பியதாக செய்திகள் மூலம் அறிந்தோம்.

இது தொடர்பில் எந்த உறுப்பினரும் கலந்துரையாடவும் இல்லை,தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளுக்கு இந்த விடயங்கள் தெரிவிக்கப்படவும் இல்லை.இது எவ்வாறு நடந்தது என்று யாருக்கும் தெரியாத புதிராகவே இருக்கின்றது.

இதில் கையெழுத்திட்ட முக்கியமான உறுப்பினர்களிடம் இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சேனாதிராஜா தொடர்புகொண்டு கேட்டபோது சிலர் அதனை மறுத்துள்ளனர்.சிலர் கையெழுத்திட்டோமா என்றும் கேட்டுள்ளனர். அப்படி நடந்ததா என்றும் கேட்டுள்ளனர்.

இதில் கையெழுத்திட்டவர்கள் அது தொடர்பிலான விளைவுகளை அறிந்து கையெழுத்திட்டார்களா,அல்லது கையெழுத்து இடவில்லையா என்பது தெரியாத நிலையில் உள்ளது.ஆரம்பித்தில் எட்டுப்பேர் கையெழுத்து இட்டுள்ளனர் என்றார்கள்.

பின்னர் 11பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்கின்றனர்.சிலரைக்கேட்டபோது தாங்கள் கையெழுத்திடவில்லையென உறுதியாக சொல்லியுள்ளனர்.இரண்டொரு நாட்களில் தாங்கள் அந்த மனுக்களில் கையெழுத்திடவில்லையென வெளிப்படையாக சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

இவ்வாறுதான் நிலைமையுள்ளது.இது தொடர்பிலான ஏதோவொரு இரகசிய நடவடிக்கை கையாளப்பட்டுள்ளது அல்லது கால அவகாசம் வேண்டும் என்கின்ற விடயத்தினை வெறும் உணர்வுபூர்வமாக எடுத்துக்கொண்டு மக்கள் தங்களை பழியாக எண்ணிவிடுவார்களோ என்று சிந்திக்காதவகையில் இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்பது தெரிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன்.அவ்வாறு பழையான வழிநடத்தப்பட்டதன் காரணமாக ஐ.நா.வுக்கு ஒரு மனுப்பப்பட்டுள்ளது.

அதன் நம்பக தன்மைபற்றி ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி தீர்வு வழங்குவதற்கு முன்பாக விடை வெளிவரும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கன்னியமிக்க உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கருத்துகளுக்கு ஒத்ததாக இயங்கிக்கொண்டுள்ளோம், தொடர்ந்து இயங்குவோம்.

கால அவகாசம் தொடர்பான விடயம் அரசு ஏற்றுக்கொண்டுள்ள கடப்பாடுகளை செய்வதற்கான உறுதியான நிபந்தனைகள் நேர அட்டவணைகள், அவற்றுக்கான மேற்பார்வைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்து எமது இலட்சியத்தினை அடைவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் அதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து இந்த நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேறிச்செல்லும் நாடாக அனைவரையும் சமமாக கருதும் அரசியல் முறைமையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் ஓரு செயல்பாடாக இருக்கும்.

அந்த செயல்பாடுகளை நோக்கியதாகவே எங்கள் செயற்பாடு இருக்குமே தவிர வெறுமனே நுனிப்புல் மேயும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்க்கமாட்டாது.

சிலரின் கூக்குரல்கள் தொடர்பாக நாங்கள் அஞ்சப்போவதுமில்லை,அக்கூக்குரல் தொடர்பில் எங்களை அலட்டிக்கொள்ளப்போவதுமில்லை.மக்கள் வழங்கிய ஆணையில் சிறப்பாக இயங்குகின்றோம்.

ஜெனிவாவில் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்,உத்திகள் தொடர்பில் எந்தவித பங்களிப்பினையும் செய்யாதவர்கள்,குறிப்பாக 2014ஆம்ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.நா.தீர்மானத்தை சர்வதேச விசாரணையில்லையென அதனை எரித்தவர்கள்,இன்று அந்த தீர்மானத்தைப்பற்றி பேசுகின்றனர் என்றார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com