சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கை வழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல – முன்னணி விளக்கம்

தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கை வழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல – முன்னணி விளக்கம்

11-07-2019
ஊடக அறிக்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான கருத்துநிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில் எமக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை கருதி எமது தரப்பு நியாயத்தை இவ் ஊடக அறிக்கை மூலமாக முன்வைக்க விரும்புகின்றோம்.

எமது மக்களின் விருப்புக்கு அமைவாக நாங்கள், நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கைவழி கூட்டு ஒன்றை உருவாக்க இதயசுத்தியுடன் செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆணித்தரமாக தெரிவித்து வந்திருக்கின்றோம். நாம் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றோம் என்பதை மீள வலியுறுத்த விரும்புகின்றோம். இவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடனான கொள்கைவழி கூட்டுக்கு நாம் தயாராயிருந்த சூழலில் குறித்த கூட்டில் EPRLF கட்சியை இணைத்துக்கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கைவழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது.

மேலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஊடக அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவையில் இருந்துகொண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வை நடாத்திய கட்சிகள் கூட்டிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். தழிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் பேரியக்கமாக செயற்பட்டு எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் ஒரு அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்காகவும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றினூடாக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையினால் தீர்வுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் 2018.02.10ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டும் பொருட்டு தழிழ் மக்கள் பேரவை 2017.11.12ம் திகதி கூடியபோது கொள்கைகளை கைவிட்டு பயணிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியையோ அதன் சின்னத்தையோ உள்வாங்குவதில்லை என்றும் அக்கட்சியுடன் தேர்தல் கூட்டமைப்பதில்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளை புறந்தள்ளிய EPRLF கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை கைவிட்டு தேர்தலை எதிர்கொண்டதாலும் தேர்தலின் பின் இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்சவுடனும் ஏனைய பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக்குழுக்களுடனும் கூட்டுச் சேர்ந்து பிதேச சபைகளை கைப்பற்ற முனைந்ததாலும், இவ்வருடம் நடைபெற்ற அவர்களது கூட்டமொன்றில் இனப்படுகொலை அரசை பாதுகாக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தி பிரசுரம் வெளியிட்டதாலும், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில்; கொள்கை வழி பயணிக்கும் கூட்டு ஒன்றில் EPRLF கட்சியுடன் நாம்; சேர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பது சாத்தியமாகாது என்பதுடன் EPRLF கட்சியுடனான கூட்டானது கொள்கை வழி நின்று தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ற உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுப்பதற்கு எம்மை தள்ளியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களுக்கு தவறிழைத்துள்ளது என்றும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றவர்கள் அதே கொள்கைகளை கைவிட்டு தவறுகளை இழைக்கும் சந்தர்ப்பவாத அசியலில் ஈடுபடும் தரப்புகளை உள்வாங்கி ஓர் கொள்கை வழிசார் உறுதியான கூட்டு ஒன்றை உருவாக்கலாம் என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஓர் செயலாக மட்டுமே அமைய முடியும். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார் என்று தான் தெரிவித்த போதும் அதை நிராகரித்து நாம் கட்சி நலன்களை முன்னிறுத்தி செயற்படுவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எம்மீது குற்றஞ்சாட்டுவது எமக்கு வேதனையளிக்கின்றது. எமது கட்சி நலனை மாத்திரமே முன்னிறுத்தி நாம் செயற்படுபவர்களாக இருந்திருந்தால் ‘சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார்’ என்ற நீதியரசரின் வேண்டுகோளை நாம் இறுகப்பற்றியிருப்போம்.

இந்தியாவின் வழிகாட்டுதலில்தான் நீதியரசர் செயற்படுகின்றார் என்று நாம் குற்றஞ்சாட்டுவதாக நீதியரசர் அவர்கள் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை 2018.10.06ம் திகதி அன்று நாம் சந்தித்தவேளை நீதியரசரே தான் சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் ‘தான் எம்முடன் இணைவதை விரும்பவில்லை’ என்றும் ‘ஏன் இந்தியா உங்களை எதிரியாக பார்க்கின்றது?’ என்றும் கேட்டிருந்தார். இந்தியாவின் நலன்களுக்காக மட்டுமே செயற்பட்டுவருகிறார்கள் என்று தமிழ் மக்களால் கருதப்படும் EPRLF கட்சி இன்றி அரசியல் கூட்டு இல்லை என்றும் EPRLF உடனான தனது கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையத் தயாரில்லை என்றால் EPRLF கட்சியுடன் தனித்து கூட்டிணைந்து செயற்படபோவதாகவும் ஓர் நிலைப்பாட்டை நீதியரசர் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர்விடயம் என்பதுடன் அது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முற்றாக சீரழித்துவிடும் என்பதையும் மிகுந்த பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தழிழ் மக்களின் கொள்கைளை முன்னிறுத்தி பயணிப்பதாக உறுதிமொழி அளித்து விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர் அக் கூட்டமைப்பானது இன்று கொள்கை வழிமாறி தடம்மாறி பயணிப்பதால் தமிழ் மக்கள் அதனை நிராகரிக்க வேண்டும் என இன்று நீதியரசரும் நாங்களும் எதற்காக கோருகின்றோமோ அதே நியாயமான காரணத்திற்காகவே நுPசுடுகு கட்சியையும் நிராகரிக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

தமிழ் மக்களின் தனித்துவமான இறைமை கொண்ட தேசத்தை உருவாக்குகின்ற கொள்கைவழி அரசியல் பயணத்தில் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து கொள்கைகளில் மிகவும் பற்றுறுதி கொண்டவர்களை ஒன்றிணைத்து பதவி ஆசைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறுதியான அரசியற் பேரியக்கம் ஒன்றை எம்முடன் இணைந்து உருவாக்க நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்வர வேண்டும் என்று திறந்த மனதுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com