தமிழ் சமூகத்தைத் தளம்பல் நிலையில் வைத்திருக்க முயற்சி! – குருபரன்

நீதிபதி இளஞ்செழியன் ஒரு தமிழ் நீதிபதி என்ற வகையில் தன்னுடைய கடமையைச் செய்யும் போது அவரது கடமைக்கு விடுக்கப்பட்ட சவால் ஒரு வட்டமாகக் காணப்படுகின்ற போதும், தமிழ்மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் ஒரு இயல்பு நிலை உருவாகுவதைப் பாதுகாப்புத் தரப்பு விரும்பவில்லை என்பதனையே இளஞ்செழியனை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நல்லூர் பின் வீதியில்   நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்  வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி இளஞ்செழியன் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை இதுவரை விசாரித்துள்ளதுடன் தற்போதும் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  எதற்காக ந டந்துள்ளது என்பதனைக் கூற முடியாமலுள்ளது.

நீதிபதியாகவிருந்து தனது வல்லமைக்குட்பட்டுச் சிறப்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தின் ஆட்சியைத் தனது நியாயதிக்குட்பட்ட வகையில் செயற்படுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்குப் பங்கமேற்படுத்துவது உடனடி நோக்கமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்திலும், தமிழர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மயப்படுத்தலை நியாயப்படுத்தக் கூடிய வகையிலேயே இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

அந்தவகையிலேயே யாழ்ப்பாணத்தில் ஆவாக் குழு மீள உருவாகியுள்ளது. அதனை நாங்கள் நசுக்குகின்றோம் என்று கூறிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரையும், விசேட அதிரடிப்படையினரையும் குவித்தார்கள்.

இதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான சுலக் ஷன், கஜன் ஆகிய இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் காரணமாக இடம்பெற்ற குழப்ப நிலை நீங்கி யாழ்ப்பாணத்தில் சமூகமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மீண்டுமொரு தளம்பல் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சுழல் வட்டத்தில் நிலைமை சுமூகமடைவதும், வேண்டுமென்றே சில சக்திகள் அதனை மீளவும் குழப்புவதும் தமிழர்கள் ஒரு அரசியல் சக்தியாக, சமூக சக்தியாக மீண்டெழக் கூடாதென்ற வகையில் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றதா? என்ற கேள்வியெழுகிறது. ஆகவே, நாங்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மிகவும்  அவதானமாகவிருக்க வேண்டும்.

தமிழ்மக்களைத் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கக் கூடிய, தமிழ் சமூகத்தைத் தளம்பல் நிலையில் வைத்திருக்கக் கூடிய முயற்சி என்ற பார்வையில் இவ்வாறான சம்பவங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வழங்கிய விசேட  செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com