தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிதாக வழக்குகளை தாக்கல் செய்ய புதிய கைதுகள்!

சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிதாக வழக்குகளை தாக்கல் செய்ய இலங்கை அரசு இப்பொழுது வெளியிலுள்ள இளைஞர்களை கைது செய்துகொண்டிருப்பதாக அவர்களது குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று (14) வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்களின் சார்பினில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டினிலேயே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் குடும்பங்கள் சார்பினில் கலந்து கொண்ட ரீட்டா ஜோசப் செபஸ்டியன் மேலும் தெரிவிக்கையினில் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்தாலேயே ஆட்சிக்கதிரை ஏறியது. நாமும் அதனால் தான் வாக்களித்தோம்.

ஆனால் அவர்கள் ஆட்சி பீடமேறிய பின்னர் நல்லாட்சி நடக்கவில்லை.அரசியல் கைதிகள் பற்றி இப்போது எவருமே பேசுகின்றார்கள் இல்லை.சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முதல் மனித உரிமை ஆணைக்குழு வரை கையாலாகாதவர்களாக சிறைகளிற்கு சென்று வேடிக்கை பார்த்துவருகின்றனர்.

எனது கணவரான ஜோசப் செபஸ்டியன் 2013ம் ஆண்டின் டிசெம்பர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நான் அறிய விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தது கிடையாது.விசாரணைக்கு வரச்சொல்லி வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

இன்றுவரை அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தாது தடுத்து வைத்துள்ளனர்.எனது 15 வயது மகன் படிப்பினை கைவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றார்.ஏனைய பிள்ளைகள் படிப்பினை தொடர முடியாது திண்டாடுகின்றனர்.

அரசியல் கைதிகள் விரைந்;து விடுவிக்கப்படவேண்டும்.எனது கணவர் உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பேச்சளவினில் இல்லாமல் நாங்கள் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாம் வாக்களித்து தெரிவானவர்கள் தற்போது வாய்மூடி மௌனம் காத்திருக்கின்றனர். அவர்கள் விரைந்து இவ்விவகாரத்திற்கு முடிவை பெற்றுதராவிட்டால் அவர்கள் அலுவலகங்களும் முற்றுகையிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com