சற்று முன்
Home / செய்திகள் / தமிழ்ப் பொது வேட்பாளர் – கூட்டமைப்பு முட்டுக்கட்டை – முயற்சியை கைவிடோம் என்கிறது சுயாதீனக் குழு

தமிழ்ப் பொது வேட்பாளர் – கூட்டமைப்பு முட்டுக்கட்டை – முயற்சியை கைவிடோம் என்கிறது சுயாதீனக் குழு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்கும் சுயாதீனக் குழுவின் முயற்சியில் சறுக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும் நாளை நண்பகல் தமிழ் பொது வேட்பாளருக்காக கட்டுப்பணம் செலுத்தப்படவே பெரும்பாலும் வாய்ப்புக்கள் உள்ளதாக சுயாதீனக் குழுவில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.

தாம் தெரிவுசெய்த வேட்பாளர்கள் சிலரது பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக்காக அனுப்பிய நிலையில் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டமையே தமது இறுநேர முயற்சியில் சறுக்கல் ஏற்படக் காரணம் என சுயாதீனக் குழுவில் அங்கம்வகிக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களின் தமிழ் மக்களின் வாக்குகளை இராஜதந்திரமாகச் சூறையாடியும் நெருக்கடிகளின்போது ஆதரவையும் பெற்றுவிட்டு தேர்தல்களின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்துவரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் எழுத்து மூல உத்தரவாதத்தை பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்திருந்தது.

எனினும் தற்போது ஜனாதிபத் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் எந்த தரப்பிற்கும் எழுத்துமூல உத்தரவாம் அளிக்கப்போவதில்லை என உறுதியாகக் கூறிவிட்டனர்.

இந்நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி தமிழர் தரப்பின் கோரிக்கைகளை முன்வைத்து அவரிற்கு வாக்களிக்க மக்களைக் கோருவது எனவும் அதன்போது சிங்களத் தலைவர்கள் பேரம்பேசலுக்கு வந்தால் உறுதியான பேரம்பேசலில் ஈடுபடுவதும் என்பதையும் நோக்காகக் கொண்டு மதகுருமார் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுயாதீனக் குழு ஒன்று தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய அரசியல் கட்சிகளிடம் பேச்சுக்கள் நடத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட், ரெலோ, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், தமிழர் சுயாட்சிக் கழகம் உள்ளிட்ட அரசியல் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தியருந்தனர்.

குறித்த அரசியல் தரப்புக்கள் கொள்கையளவில் குறித்த தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு இணங்கியபோதும் யாரைப் பொது வேட்பாளராகக் களமிறக்குவது எனும் விடையத்தில் முரண்படுவதாக தெரியவந்துள்ளது.

நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரையான மூன்று மணித்தியாலங்களே கட்டுப் பணம் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ள நிலையில் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்வதில் சுயாதீனக் குழு திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியல் கட்சி சாராதவராக இருக்கவேண்டும் என சில அரசியல் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளன. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிடித்துப்போன ஒருவரையே தமிழ்ப் பொதுவேட்பாளராக அறிவிக்கவேண்டும் எனபதிலும் சுயாதீனக் குழுவில் உள்ள சிலர் விடாப்பிடியாக நிற்பதாக சுயாதீனக் குழுவில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.

இதனிடையே சிலவேட்பாளர்களின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்வைத்தபோது கூட்டமைப்பு அவர்களின் பெயர்களை நிராகரித்துவிட்டமையே இழுபறி நிலைக்கு காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் நாளை நண்பகல் தமிழ் பொது வேட்பாளருக்காக கட்டுப்பணம் செலுத்தப்படவே பெரும்பாலும் வாய்ப்புக்கள் உள்ளதாக சுயாதீனக் குழுவில் உள்ள மற்றொரு செயற்பாட்டாளர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com