தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றுங்கள்: நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

(18.10.2015) தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“நம்ம நடிகர்கள் எல்லாம் அனைவருமே ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி. நமக்குள்ள எப்போதுமே ஒற்றுமை இருக்கும், இருக்க வேண்டும். சமீபகாலத்தில் சில வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. அதற்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லை என யாரும் நினைக்க கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது, அதில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். எனக்கு இரண்டு வேண்டுகோள் இருக்கின்றன,
முதல் வேண்டுகோள் : யார் ஜெயித்து வந்தாலும் சரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்துவிட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை வைக்க வேண்டும்
இரண்டாவது வேண்டுகோள்: ஆயிரம் முறை யோசித்து வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற முடியாமல் போனால் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும்.நல்ல எடுத்துக்காட்டாகவும் இருப்பீர்கள்”.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் துவங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் அப்பாஸ் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்தலில் நடிகர் சரத் குமார் தலைமையில் ஒரு அணியும் நடிகர் நாசர் தலமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றன.
சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கும், ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். நாசர் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும் விஷால் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் 3139 பேர் வாக்களிக்க முடியும். தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தனர். தபால் வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 783 பேர் தபால் மூலமாக வாக்களித்துள்ளர்.
வாக்குப்பதிவு இன்று காலையில் ஏழு மணிக்குத் துவங்கியது. இன்று மாலை ஐந்து மணி வரையில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குகளை எண்ணும் பணி துவங்கும். இரவு 9 மணியளவில் முடிவுகள் வெளியாகத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com