தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கூட்டணி அமைக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி !

Rathakrishnanதமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 26.11.2016 அன்று சனிக்கிழமை காலை நுவரெலியா – டயகம தோட்டம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இங்கு உரை நிகழ்த்துகையில்,

வட, கிழக்கு போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மலையகத்தில் போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். அது ஆயுத போராட்டமாக அல்லாமல் காத்திரமான அகிம்சை போராட்டமாக உருவெடுத்திருந்தால் இன்று நாம் இன்னும் பல வெற்றிகளை பெற்றிருக்க முடியும்.

வட கிழக்கு போராட்ட ரீதியாக தோழ்வி அடைந்திருந்தாலும் அந்த போராட்டத்தின் ஊடாக இன்று அவர்கள் பல வெற்றிகளை பெற்று வருகின்றார்கள். எனவே மலையக மக்களுடைய பிரச்சினைகளும் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

எதிர்காலத்தில் எமது பிரச்சினைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவர்களுடைய பிரச்சினைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியும் பேசுவதற்கான நிலைமை உருவாக வேண்டும்.

மலையக மக்கள் இன்று உணவு, உடை, உரையுள் ஆகிய அடிப்படை தேவைகளுக்காக போராட்ட வேண்டிய நிலை இருக்கின்றது.

சம்பள பிரச்சினை மாத்திரம் எம்முடைய பிரச்சினை அல்ல. அதுவும் ஒரு அடிப்படை பிரச்சினை. ஆனால் அதற்கு அப்பால் இன்னும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். அந்த பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தபட வேண்டும்.

எனவே எதிர்காலத்தில் காத்திரமான அகிம்சை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக சரியான தலைமைத்துவம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com