தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுக்கிறதா ?

SAMSUNG CAMERA PICTURES

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா சம்பந்தன் நாமெல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என தனது உரையின் இடையிடையே கூறிக்கொண்டிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் யாவும் இந்த மேதின நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில் சம்பந்தனது உரையில் ஒற்றுமை பற்றிய வலியுறுத்தல் அதிகம் இடம்பெற்றமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வருவதை கோடிட்டுக் கட்டுவதாக நோக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது எனகுற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டம் இதற்கு ஒரு உதாரணம் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
யாழ்ப்பாணம் மருதனாமடுப் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டம் முழுமையாக தமிழரசுக் கட்சியின் கூட்டமாக இருந்ததே தவிர, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமாக இருக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இனப்பிரச்சனைக்கான தீர்வு எவ்வாறு இருக்கப் போகிறது, அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்த எந்த தகவலும் தமிழ் மக்களுக்கு தெரியாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
கடந்த தேர்தலின்போது இனப்பிரச்சனைக்கானத் தீர்வு 2016ஆம் ஆண்டு எட்டப்படும் என அவர் கூறியதை வைத்தே மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும், தனியான கட்சிகள் சார்பில் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து விஷயங்களையும் கூட்டமைப்பின் தலைவர் இரகசியமாகவே கையாளுகிறார் எனக் கூறும் சுரேஷ், தமிழரசுக் கட்சி தனிவழியாகச் செயற்பட்டு தனிவழியில் செல்ல விரும்புகிறது எனவும் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசு கட்சியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் எனவும் சாடியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பிலுள்ள இதர கட்சிகள் அவ்வாறு எவ்வகையிலும் செயல்படவில்லை என்கிறார்.
தமிழ் மக்கள் மத்தியில் சம்பந்தர் பொய்யான ஒரு பிம்பத்தை கொண்டுவர முயற்சிக்கிறார் எனவும் ஈ பி ஆர் எல் ஃபின் தலைவர் கடுமையாக குற்றஞ்சாட்டுகிறார்.
இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சியை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்துகிறார்.

No comments

  1. A real and true article…well-done mr.Nilanthan…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com