சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ்க் கூட்டமைப்பின் விருப்புவாக்கு மோசடியை அம்பலப்படுத்திய வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்

தமிழ்க் கூட்டமைப்பின் விருப்புவாக்கு மோசடியை அம்பலப்படுத்திய வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்

(20.08.2015) நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்புவாக்கு தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் நிலவிவந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும்வகையில் இன்றைய தனது ஆசிரியர் தலையங்கத்தை வரைந்துள்ள வலம்புரி நாளிதழ் . “தேர்தல் வன்முறையில் ஈடுபட்டால் தலையில் வெடி என்கிறார் தேர்தல் ஆணையாளர். அப்படியானால் விருப்பு வாக்கில் மாற்றம் செய்த உத்தியோகத்தருக் கான தண்டனை என்ன?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

நடந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அருந்தவபாலனுக்கு ஏற்பட்ட நிலைமையை அறிந்த போது பாரதப் போரில் குற்றுயிராய்க் கிடந்த கர்ணனின் நிலையை உணர்ந்து துயருற்றதாகக் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்  நீதி நிலைக்கவே மாட்டாதா? என்பதுதான் அந்த சோகத்தின் மூலகாரணம் எனவும் தான் அப் பத்தியில் சொல்வது சுருக்கமான விடையம் எனவும் விரிவாக்கம் மாவை சேனாதிராஜாவிறகுத் தெரியும் என சாடியுள்ள நாளிதழின் ஆசிரியர். தமிழ் மக்கள் நடந்தும் கிடந்தும் தவழ்ந்தும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏன் இப்படி ஒரு கபடத்தனம் நடந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 மாவை சேனாதிராஜாவிற்கு ஓர் அன்பு மடல் என்ற தலைப்பில் இன்றைய வலம்புரி நாளிதழில் வரையப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முழு வடிவம் வருமாறு,
மாவை சேனாதிராசாவுக்கு ஓர் அன்புமடல்
2015-08-20 12:15:37

மதிப்புக்குரிய மாவை சேனாதிராசா அவர்களுக்கு அன்பு வணக்கம். தேர்தலுக்குப் பின்னர் அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என் பதற்கு அப்பால், பழுத்த அரசியல் தலைவர் என்ற வகையிலும் தங்கள் மீது தமிழ் மக்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர்.
எனினும் அரசியலில் தாங்கள் கொண்ட பலமான அனுபவமும் கட்சித் தலைமை அதிகாரமும் தங்க ளிடம் இருந்தும் சில முக்கிய இடங்களில் தங்களை மேவுகின்ற தங்கள் கட்சி உறுப்பினர்களைக் கண்டு மக்கள் மனம் வருந்துவதுண்டு. இவ் இடத்தில் மாவை சேனாதிராசா கட்சியை நெறிப்படுத்த வேண் டும் என்ற கருத்தும் பல தடவைகள் எழுந்துள்ளன.
அதில் ஒன்றைத்தான் இந்த இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளோம்.
எனது சிறு வயது. என் சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தேன். தொடராகப் படிக்கின்ற பழக்கம் அப்போது மாணவர் களிடம் இருந்தது. மகாபாரதத்தில் ஒரு காட்சி.
கர்ணன் விழுபுண் பட்டு போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். தாய் இல்லை; தந்தை இல்லை. கூடவே பரசுராமரின் சாபம். உற்றபோது கற்றது மறந்த பரிதாபம். இவற்றை எல்லாம் அவன் மீட்கும் போது வில் துளைத்த வலி அவனை அம்மா என்று சொல்லத் தூண்டுகிறது. இருந்தும் அம்மா என்றால் குந்தி அல்லவா? மனக்கண் வருகிறாள்.
தன்னைப் பெற்ற குந்தி வளர்க்காவிட்டாலும் இரு வரத்தையாவது கேட்காமல் விட்டிருக்கலாமல் லவா? வரமும் கேட்டுப் பெற்றாளை அம்மா என் றால், வேதனை இன்னும் இருமடங்காகும்.
என் செய்வது! அந்த நேரத்தில், கர்ணா நீ செய்த புண்ணியம் அனைத்தையும் தா என்று கேட்பதற்கு கண்ணன் வருகிறான்.
அந்தக் கட்டத்தைப் படித்த போது நான் படித்த மகாபாரதப் புத்தகம் நனைந்து கொண்டது. அந்த ஈரம் மறுபக்கத்தை புரட்டவிடாமல் என்னை ஆற்றுப் படுத்த துடிப்பது போலவும் இருந்தது.
இதுபோன்ற ஒரு சோகத்தை நடந்து முடிந்த தேர் தலில் இடம்பெற்ற ஒரு சம்பவம் எமக்கு ஏற்படுத்தி விட்டது.
நடந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அருந்தவபாலனுக்கு ஏற்பட்ட நிலைமை யை அறிந்த போது பாரதப் படிப்பில் ஏற்பட்ட சோகம்.
நீதி நிலைக்கவே மாட்டாதா? என்பதுதான் அந்த சோகத்தின் மூலகாரணம். நான் இங்கு சொல்வது சுருக்கம். விரிவாக்கம் நீங்கள் அறிந்ததே. ஐயா! தேர்தல் வன்முறையில் ஈடுபட்டால் தலையில் வெடி என்கிறார் தேர்தல் ஆணையாளர். அப்படியானால் விருப்பு வாக்கில் மாற்றம் செய்த உத்தியோகத்தருக் கான தண்டனை என்ன?
தமிழ் மக்கள் நடந்தும் கிடந்தும் தவழ்ந்தும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க; ஏன் இப்படி ஒரு கபடத்தனம் நடந்தது?
நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தென் மராட்சி மக்களின் நம்பிக்கையும் அவர்கள் அளித்த வாக்குகளும் வீண்போகக் கூடாது என்பதால், தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அருந்தவ பாலன் பாராளுமன்றம் செல்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துணிவோடு அதைச் செய்யுங்கள். இது ஒன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை ஆற்றுப்படுத்தும்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com