தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசு குறுகிய காலத்தில் பாரிய முன்னேற்றம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் மிகக் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் புதன்கிழமை(20) சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை அங்கு உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.

இலங்கை புதிய பாதையில் பயணிக்கின்றது. ஆசியாவிலே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இங்கு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இதுவொரு பாரிய சவாலை வெற்றி கொண்டதற்கு சமமானதாகும் இந்ததேசிய அரசு உதயமானதன் பின்னர் மக்களுக்கு பல்வேறுபட்ட நன்மையான பணிகளை முன்னெடுத்திருக்கின்றது.

மக்களின் பிரதான பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டுள்ளன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்த கால கட்டத்தில் நாட்டை மீட்டெடுத்து நல்லாட்சியின் மூலம் ஜனநாயகத்தை மலரச் செய்ய முடிந்துள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த, அல்லது வெளியேற்றப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை மீளக்குடியமர்த்துவதிலும், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் முடிந்துள்ளது. நாட்டுக்குத் தேவையான பொருளாதார மாற்றம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பல முன்னேற்பாடான திட்டங்களில் ஆரம்ப வெற்றியை ஈட்டிக் கொண்டிருக்கின்றோம்.

அதே போன்று அரசியலமைப்பினூடாவே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் தேர்தல்கள் மூலம் அரசுகள் மாறி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் எக்காலத்திலும் மாற்றம் காண முடியாத தேசிய கொள்கைத் திட்டத்தை தயாரிப்பதில் எமது அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி கருத்துக்களுடன் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.

கேள்வி – சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொள்ளும் உடன்படிக்கை தொடர்பாக தெளிவுபடுத்துவீர்களா?

பதில்- இது தொடர்பாக நாம் இன்னமும் சர்வதேச நாணயத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். உலகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இப்போதிருந்தே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்து ஆழமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் பிரகாரமே இந்த உடன்படிக்கையை தயாரிக்க எண்ணியுள்ளோம்.

கேள்வி – தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு எவ்வாறாகச் செயற்படுகின்றது?

பதில் – எமது அரசு இது தொடர்பில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேசி வருகின்றது. அத்துடன் புதிய தேர்தல் முறை குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் மக்களின் காணிகளை அவற்றின் சொந்த உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றச் செயற்பாடுகளின் போது மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு பெற்றுக் கொடுக்கும். அத்துடன் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாமனைவரும் இலங்கையர்கள் என்பதே எமது ஒரே நிலைப்பாடாகும்.

கேள்வி – தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வாறாக உள்ளது?

பதில்- தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரசியல் கைதிகள் என வெவ்வேறு பிரிவுகள் கிடையாது. நாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகள் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டில்லாத பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி – அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் இலங்கை எதிர்நோக்கும் சவால் என்ன? அத்துடன் சீனா இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?

பதில் – சீனா உலகில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அந்த நாடு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நாடாகவே நாம் சீனாவை நோக்க வேண்டும். இலங்கையின் அடிப்படை வசதிகளுக்காக பெருந் தொகையான பணத்தை சீனா செலவிட்டுள்ளது. அந்த நாட்டின் பல திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அண்மித்த பகுதியின் அபிவிருத்தித் திட்டம், கொழும்புத்துறைமுக நகரத் திட்டம் என்பனவற்றை குறிப்பிடலாம். எனினும் நாம் சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பது நிதி உதவிகளையும், கடனுதவிகளையும் மட்டுமல்ல. எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான முதலீடுகளை சீனா செய்யவெண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

சீனாவிடமிருந்து மட்டுமல்ல பொருளாதார வளம் பொருந்திய உலக நாடுகளிடமிருந்து பெருமளவிலான முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டை பொருளாதார பலம்மிக்கதாகி உன்னத நிலைக்குக் கொண்டு வருவதே எமது இலக்காகும்.

கேள்வி – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது போட்டிகளை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே அது தொடர்பில் உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

பதில் – கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்குமானால் நிச்சயமாக முழு அளவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஒருநாட்டின் மீது இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால் விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டும். அதன் மூலம் நாட்டினதும், விளையாட்டு வீரர்களதும் தூய்மைத் தன்மையை நிரூபிக்கக் கூடியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com