தமிழர்க்கு துரோகமிளைக்கும் தமிழரசுக் கட்சி தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் வலியுறுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் எதனையும் பின்பற்றாமல் தொடர்ச்சியாக தமிழர்களிற்கு துரோகம் இழைத்துவருவதோடு சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துவரும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் கூறி வரும் நிலையில், தமிழ் மக்கள் அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கத்தை மேலும் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்த்தனமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் இன்று (24) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தமிழரசுக் கட்சிமீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவரும் நீங்கள் தமிழரசுக் கட்சிஅங்கம்வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்துகொண்டு இவ்வாறு தொடர்ச்சியாக விமர்சனம் செய்வதை மக்கள் மத்தியில் எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றீர்கள் எனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெளிவாக ஒரு விடயத்தை கூறியுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என, ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளையும், உள்நாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதனை தான் ஜெனிவா தீர்மானம் வலியுறுத்துகின்றது. ஆனால் இலங்கையின் ஜனாதிபதியும், பிரதமரும் மிக தெளிவாக ஐ.நா தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார்கள். இந்த விடயத்தை வெறுமனே வீதியில் நடைபெறும் கூட்டத்தில் அவர்கள் பேசவில்லை. நாட்டின் அதியுயர் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்கள்.

இந்தளவு பிரச்சனைகளுக்கு காரணம் மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூனோடு செய்துகொண்ட ஒப்பந்தம் எனவும், யுத்தம் முடிந்த பிற்பாடு பான்கீ மூன் வந்த போது சர்வதேச விசாரணைகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அதன் பிரகாராம் தான் இந்த தீர்மானம் வந்துள்ளது. ஆகவே தவறுகள் எங்கள் பக்கம் அல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் மூல காரணம் எனவும், அரசாங்கம் கூறி வருகின்றதோடு, நாட்டிற்குள் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுனர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். எனவும் கூறி வருகின்றனர்.

ரோமில் உருவாக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம் சர்வதேச குற்றங்கள் இழைக்கப்படுமாக இருந்தால், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு போக வேண்டும். ஆனால் ரோமில் இயற்றப்பட்ட சட்டத்தை இன்னமும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அந்த சட்டம் இலங்கையில் செல்லுபடியற்றது. இனிமேலும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அரசும் கூறியுள்ளார்கள். இவ்வாறன ஒரு சூழ் நிலையில், அரசாங்கம் தெட்டத்தெளிவாக சரதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என கூறிய பின்னர், சுமந்திரன், உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் சர்வதேச நீதிபதிகளை கூப்பிட வேண்டும், இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் வருவதற்கு எந்த தடையும் இல்லை, என்ற கருத்துக்களை கூறுவது என்பது ஏமாற்று வேலையே.
எமது கௌரவமான இராணுவத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்களை நாங்கள் காட்டிக்கொடுக்க மாட்டோம், அவர்களை விசாரணைக்கு உட்படுத்த மாட்டோம். என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வருகின்றார். ஆகவே அடிப்படையாக ஒரு விடயம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள், இரண்டாவதாக சர்வதேச நீதிபதிகளை, சர்வதேச வழக்கு தொடுனர்களை அனுமதிப்பதில்லை ஆகிய இரு விடயங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் மிக தெளிவாக பாராளுமனறத்தில் கூறப்பட்ட பின்னர்,
தமிழ் மக்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பில்தான் சிந்திக்க வேண்டும். கூப்பிடுவார்கள் கூப்பிடுவார்கள் என்று கொண்டு நாங்கள் இருக்க முடியாது. பதினெட்டு மாதங்களாக கூப்பிடவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தனோ, சுமந்திரனோ விரும்பியிருந்தால் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்கியிருக்க முடியும். போராட்டங்களை அறிவித்திருக்கலாம் ஆனால் இங்கு நடைபெற்ற எழுக தமிழ் போன்ற போராட்டங்களை கூட இவர்கள் தடுக்க முயற்சி செய்திருந்தார்கள்.
ஆகவே பாரிய போராட்டங்களை நடாத்தி மக்களுடைய, மற்றும் உலக நாடுகளின் அழுத்தங்களை கொடுத்திருந்தால் மாற்றங்கள் வந்திருக்கும் 18 மாத காலம் இவற்றை செய்யவில்லை. தற்போது இரண்டு வருட கால அவகாசத்தை கொடுத்தால் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இந்த நிலையில் அரசாங்கம் செய்யும் என எந்த அடிப்படையில் சுமந்திரன் கூறுகின்றார். அரசாங்கத்தை காப்பாற்றவே சுமந்திரன் இவ்வாறு செயற்படுகின்றார். வேறெதுவும் கிடையாது. அவர் கூறும் எந்தவிடய்த்திலும் உண்மை தன்மையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com