சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிறார்கள்!

தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிறார்கள்!

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புன்னை நீராவி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சியின் வட்டார அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர் கூறுகையில், “அக்கராயன் மண்ணிலே அக்கராய மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது வழக்கம்.

கரைச்சி பிரதேச சபையினர், அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவதற்கு இன்று சென்றபோது அந்த இடத்திலே குவிக்கப்பட்டிருந்த இராணுவமும் பொலிஸாரும் கரும்புலிகள் நாளைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள் என்றுகூறி மன்னனுடைய சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

ஈழத்தில் வாழ்ந்த ஈழ மக்களுக்காக ஆங்கிலேயர்களுடன் போத்துக்கீசருடன் போராடிய எங்கள் பாட்டனுக்கு வணக்கம் செலுத்த முடியாத ஒரு நாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றால் எங்களுடைய சுதந்திரத்தை இழந்தவர்களாக எங்களுடைய அடையாளங்களை இழந்தவர்களாக இருக்கின்றோம்.

எங்கள் அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பதில் சிங்கள பேரினவாதம் மட்டுமல்லாது ஒட்டுக்குழுக்கள், அடிவருடிகள் என அனைவரும் குறியாக உள்ளனர். எங்கள் அடையாளத்தை நிலைநாட்ட தமிழர்களாகிய நாம் ஒரு அணியில் ஒன்றாக வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து பயணிக்க வேண்டும்.

எங்கள் மண்ணுக்காக குரல்கொடுத்தவர்கள் தொடக்கம் எங்களுடைய மூதாதையர்கள் வரைக்கும் எங்களுடைய பரம்பரையை வணங்க முடியாத ஒரு இனமாக நாங்கள் இருக்கிறோம் என்றால் நாங்கள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்ற கேள்வியை எங்களை நாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com